இஃது ஐயம் கடியும் கருவி கூறும் முகத்தான் துணிவு இலக்கணம்
கூறுகின்றது.
இ-ள் முலையினும் தோளினும் வரித்த தொய்யில் கொடியும்,
ஒருவரால் இழைக்கப்பட்ட அணிகலன்களும், கைக் கொண்டு மோந்து
உயிர்த்தலானும் சூடித் துவளுதலானும் வாடிய பூவும், தாது ஊதப் படிந்த
வண்டும், நிலம் தோய்ந்து நடத்தல் தொழிலோடு பயின்ற அடியும், பக்கத்தே
பெயர்ந்து பிறழும் கண்ணும், ஆண்மகனைக் கண்டுழி மனத்துப் பிறந்த
அச்சமும், அவைபோல்வன பிறவும் மேல் அங்ஙனம் ஐயுற்ற தலைவன்
மாட்டு நிகழாநின்ற எண்ணிலா ஐயங்களைப் போக்குவனவாம் என்றவாறு.
பிறவாவன நிழலீடும் வியர்த்தலும் கூறை மாசுணலும் முதலாயின. இவை
தெய்மகளிர்க்கு இல்லாதன ஆதலான் ஐயம் கடிவன ஆயின என்க.