அவன் அவட்கு அவ்வாறு தன் குறப்பினை விளங்க உணர்த்தல், உற்று நோக்கும் நோக்கிற்கு எதிர்நோக்கி என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.
இக்குறிப்புஅறிதலே வழிநிலைக்காட்சியாய்ப் புகுமுகம் புரிதல் என்னும் மெய்ப்பாடு கூறியதூஉம் ஆயிற்று.
"நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக் கொண்டன்ன(து) உடைத்து". குறள். 1082
எனவரும்.
"அணியும் அமிழ்தும்என் ஆவியும் ஆயவன் தில்லைச்சிந்தா
மணிஉம் பரார்அறி யாமறை யோன்அடி வாழ்த்தலரின்
பிணியும் அதற்கு மருந்தும் பிறழப் பிறழமின்னும்
பணியும் புரைமருங் குல்பெருந் தோளி படைக்கண்களே".
திருக்கோவை. 5
இதுவும் அது.
இன்னும், மேல் "மாட்சி" (இ. வி. 486) என்ற மிகையானே, துணிந்தவழி வியத்தலும், குறிப்பு அறிந்தவழித் தெய்வத்தை மகிழ்ந்து உரைத்தலும், அதன்வழித் தெய்வப் புணர்ச்சி துணிதலும் வரவும் பெறும்.
"அகல்கின்ற அல்குல் தடம்அது கொங்கை அவைஅவம்நீ
புகல்கின்றது என்னைநெஞ்சு உண்டே இடைஅடை யார்புரங்கள்
இகல் குன்ற வில்லில் செற் றோன்தில்லை ஈசன் எம் மான்எதிர்ந்த
பகல்குன்றப் பல்உகுத் தோன்பழ னம்அன்ன பல்வளைக்கே".
திருக்கோவை. 4
|
|
|
|