அகத்திணையியல்-நூற்பா-119                              277


 

     "அணியும் அமிழ்தும்" -

     மின்னலையும் பாம்பினையும் ஒக்கும் இடையினள் ஆகிய
 இப்பெருந்தோளியின் படைக்கண்கள், பிறழுந்தோறும், பொது நோக்கத்தான்
 தில்லையானை வாழ்த்தாதவரைப் போல உறும் பிணியும், உள்ளக்கருத்து
 வெளிப்படுத்தும் நோக்கத்தான் அதற்கு மருந்தும் ஆகும் என்றவாறு.

     "அகல்கின்ற" -

     "திரிபுரத்தை, மலையை வில்லாகக் கொண்டு அழித்தவனும், எதிர்த்த

     பகலவனைப் பல் உகுத்தவனும் ஆகிய தில்லையான் திருப்பழன நகரை
 ஒத்த தலைவிக்கு அல்குலும் கொங்கையும் உண்மையான் இடை உருவு
 நுணுகினும் உண்டு" என்று தலைவன் தலைவியின் வனப்பைப் புகழ்ந்தவாறு"

     "வளைபயில்" -

     "தில்லையான் கயிலையில் இக்கெண்டைவிழியாளை, கீழ்க்கடலில்
 இட்ட கழி மேல்கடலில் இட்ட நுகத்தின் துளைக்கண் கோத்தாற்போல,
 கைக்கொண்டு எனக்குத்தந்த தெய்வத்தை அன்றிப் பிறவற்றை வியவேன்;
 நயவேன்;" என்று தலைவன் தெய்வத்தை மகிழ்ந்தவாறு.

     "ஏழுடையான் பொழில்"

     "மனமே! ஏழுலகிற்கும் உரியனாய் எண் தோளனாய் என்னை ஆண்ட
 இறைவனது  புலியூரை ஒத்த இவள் இச்சோலையில் தன் ஆயத்தை
 நீத்தலுக்குத் துணையான விதியான் நமக்குக் கந்தருவ மணம்
 கிடைத்துள்ளது" என்று தலைவன் தெய்வச்செயல் கூறி மனத்தை
 ஒருப்படுத்தியவாறு.

     முத்துவீரியநூலார் இவ்வேழனையும் கைக்கிளைத்துறையாகக் கொண்டது
 காண்க. [பக்கம். 262]

ஒத்த நூற்பாக்கள்

    "நாட்டம் இரண்டும் அறிவு உடன் படுத்தற்குக்
     கூட்டி உரைக்கும் குறிப்புரை ஆகும்."           தொல். பொ. 96