மீதூரப்பட்ட தலைமகன் "இவள் வாய்போல நாறும் ஆம்பல் மலர்கள் உளவோ?" என வண்டிற்கு உரைப்பானாய் அவ்விருப்பம் கூறிச் சொல்கேளாத அயர்வு நீங்குதலும் நலம் பாராட்டலின்பின் வரவும் பெறும்
"சொற்பால் அமுதுஇவள் யான்சுவை என்னத் துணிந்து இங்ஙனே
நற்பால் வினைத்தெய்வம் தந்தன்று நான்இவ ளாம்பகுதிப்
பொற்புஆர் அறிவார் புலியூர்ப் புனிதன் பொதியில்வெற்பின்
கல்பா வியவரை வாய்க்கடி தோட்ட களவகத்தே"
[சிவபெருமானது பொதியமலையில் கல் பரந்த தாழ்வரையில் ஆயத்தின் காவல் நீங்கிய இக்களவில், அமுதும் அதன்சுவையும் போலப் பிரித்தல் இயலா நிலையினேமாகி, யாம், இக் காம இன்பம் நுகரத் தலைவன் எனவும் தலைவி எனவும் ஆயினேமாகத் தெய்வம் இவ்வாய்ப்பை அருளி உள்ளது.]
"உணர்ந்தார்க்கு உணர்வுஅரியோன்தில்லைச் சிற்றம்பலத்து ஒருத்தன்
குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச்செவ்வாய்இக் கொடிஇடைதோள்
புணர்ந்தால் புணருந் தொறும்பெரும் போகம்பின் னும்புதிதாய்
மணம்தாழ் புரிகுழ லாள்அல்குல் போல வளர்கின்றதே"
[சிவபெருமானுடைய குணமாகிய ஆனந்தம் வெளிப்பட்டாற் போல்வாளாகிய இக் கொடியிடையாள் தோள்களைப் புல்லுந்தோறும் பேரின்பம் முன்பு போலப் பின்னும் புதிதாய், இவள் அல்குல் போல வளர்ந்து, என்றும் ஒரே படியதாய் நிறைவுறுகின்றது.]
36 |
|
|
|