அகத்திணையியல்-நூற்பா-125                              301


 

 பிரிவு அச்சமும், அதன்பின்னர் இன்றியமையாமை எடுத்து உரைத்தலும்,
 பிரியேன் என்றலின் பின்னர்த் தீராத் தேற்றமும் வரவும்பெறும்.
 தீராத்தேற்றம்-தீராதவாறு தேற்றுதல்.

     பருவரல் உணர்தல்:

    "கறிஉறு சாரல் களிஉறு தோகைக் கணம்நடம்செய்
     வெறியுறு சோலை விழைவுஉற நீடில் வெருவுறுமான்
     மறிஉறு செங்கண் மதுமலர்க் கோதை நொதுமலர்வந்து
     அறிவுறல் கூடும்என் றோதிரு மேனி அழுங்குவதே".

அம்பி. 11 

 எனவும்,

     [பருவரல் உணர்தல்-தலைவி மனத்துக்கொண்ட வருத்தத்தைத்
 தலைவன் உணர்ந்து கூறுதல்.

     மிளகுக்கொடி வளரும் பக்கமலைகளில் மயில்கள் ஆடும் மணம்மிக்க
 சோலையில் யான் காலம் தாழ்த்தித் தங்கின், அயலார் அறிதல் கூடும்
 என்றோ, மான் விழி நங்கையே! நீ உடல் வாடி வருந்துகிறாய்?]

     பிரிவு அச்சம்:

    "நீங்கின் சிறிது பொழுதுநில் லாஉயிர் நேரிழைக்குஇன்று
     ஈங்குஇப் படிவைகில் எய்தும் பழிநமக்கு என்றுசிந்தித்து
     ஓங்கல் சிலம்பிடை நின்றுஊச லாடி உயங்கும்நம்மைத்
     தாங்கத் தகும்துணை யாதுகொல் லோஎன் தனிநெஞ்சமே".

அம்பி. 12 

 எனவும்,

     [பிரிவுஅச்சம்-தலைவியிடத்து அன்பு காரணமாகப் பிரிதற்குத்
 தலைவன் அஞ்சுதல்.

     மனமே! "யாம் பிரியின் தலைவி உயிர் நீப்பாள்; இங்கேயே இருப்பின்
 பழிவந்து சேரும்" என்று எண்ணியவாறே இம்மலையில் ஊசலாடி வாடும்
 நம்மைத் தாங்கி ஒருவழிப்படுத்தும் துணை யாதோ?]