308                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     பண்பு பாராட்டல்:

    "குன்ற நாடன் குன்றத்துக் கவாஅன்
     பைஞ்சுனை பூத்த பகுவாய்க் குவளையும்
     அஞ்சில் ஓதி அசைஇயல் கொடிச்சி
     கண்போல் மலர்தல் அரிது அவள்
     தன்போல் சாயல் மஞ்ஞைக்கும் அரிதே".

 எனவும்,                                             ஐங்குறு 299 

     [வெற்பன் மலைப்பக்கத்துச் சுனைக்கண் பூத்த குவளைகள் இக்குன்றவர்
 மகளின் கண்போல் மலர்தலும் இயலாது. இவள்போன்ற கண்ணுக்கு
 இனிமைதரும் மென்மை மயிலுக்கும் அமையாது.]

     பயந்தோர்ப் பழிச்சல்:

    "தூயசெந் தாமரைப் பொன்னைஎன் ஆவித் துணையைத்தந்த
     தாயரும் தந்தையும் தாரணிமேல் உந்தி தந்தஅண்ணல்
     ஆயுவும் தாதை அருளும் புராரி அழகுஎறிக்கும்
     தேயுவும் இந்திரன் செல்வமும் கூடிச் சிறக்கநின்றே"

 எனவும்,                                               அம்பி. 23

     [திருமகள் போல்வாளாய் என்உயிருக்குத் துணையாகிய இவளை
 எனக்குப் பெற்று அளித்த தாயும் தந்தையும் இவ்வுலகில்
 பிரமனைப்போன்ற ஆயுளும், திருமாலைப்போன்ற அருளும்,
 சிவபெருமானைப்போன்ற ஒளியும், இந்திரனைப் போன்ற செல்வமும்
 பெற்றுச் சிறப்பாராக. தாயர் என்றது பெற்ற நற்றாயையும், ஆட்டுவாள்,
 ஊட்டுவாள், ஓல்உறுத்துவாள், நொடிபயிற்றுவாள், கைத்தாய் என்ற
 செவிலித்தாயர் ஐவரையும், உட்கொண்டு சொற்றது.]

     கண்படைபெறாது கங்குல் நோதல்:

 "மயில்போல் இனியமென் சாயல்நல் லாருடன் வல்வினையேன்
  துயில்போனது; இன்னமும் தோன்றவும் காண்கிலன் சோலைஇளங்
  குயில்போல் மொழியவர் தம்குழல் போல்இருள் கூர்ந்து கொற்றம்
  அயில்போல் மறம்செய் கண்போல், அறநீளும் அருங்கங்குலே.

 எனவும் வரும்.                                         அம்பி. 24