314                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     "இலக்கணவிரி" என்ற மிகையானே, தந்த தெய்வம் தரும் எனச் சென்ற
 பின்னர்த் தலைவன் நெஞ்சொடு வினாதலும், அதன் பின்னர்க் கிள்ளை
 வாழ்த்தலும், அதன் பின்னர் அவள் எதிர்ப்பட்ட இடத்தை அவளாகக்
 கூறுதலும், அதன் பின்னர் மன்னனை நினைந்து மின்னிடை மெலிதலும்,
 முந்துறக் காண்டலின் பின்னர்த் தனிநிலை கண்டு தளர்வு அகன்று
 உரைத்தலும், தானநீங்கியவழிப் பிறந்த வருத்தமும் வேட்கையும் அவள்
 அறியுமாறு தலைவன் கூறுதலும், அதன்பின்னர்க் கூடற்கு அரிது என வாடி
 உரைத்தலும், ஆயத்து உய்த்த பின்னர் நீங்கற்கு அருமை நின்று
 நினைத்தலும் வரவும்பெறும்.

  தலைவன் நெஞ்சொடு வினாதல்:

 "நீடுங்கொல் லோகொண்ட நேயம்என் ஆயத் தவரிடையில்
  தேடுங்கொல் லோவந்து செல்லுங்கொல் லோஅந்தச்செவ்விஇன்னம்
  கூடுங்கொல் லோவிதி கூட்டுங்கொல் லோஎன்று கொம்பின்உள்ளம்
  வாடுங்கொல் லோஅறி யேன்மலைச் சாரலில் வந்துநின்றே".

அம்பி. 26
 


 எனவும்,

     [தலைவி மலைச்சாரலில் வந்துநின்று "நம் நட்பு நீட்டிக்குமா, அவர்
 ஆயத்திடை என்னைத் தேடுவாரா, வந்து சென்று விடுவாரா? அந்த வாய்ப்பு
 இன்னும் கூடுமா, அவ்வாய்ப்பை விதி கூட்டுமா" என்று மனம் வாடுவாளோ?
 அறியேன்.]

     கிள்ளை வாழ்த்தல்:

    "வெள்ளம் வரம்பின் ஊழி போகியும்
     கிள்ளை வாழிய பலவே ஒள்ளிழை
     இரும்பல் கூந்தல் கொடிச்சி
     பெருந்தோள் காவல் காட்டி யவ்வே".

ஐங்குறுநூறு. 281
 


 எனவும் வரும்.