அகத்திணையியல்-நூற்பா-133                              331


 

     கலவியின் மகிழ்தல்:

 "வேட்ட பொழுதின் அவைஅவை போலுமே
  தோட்டார் கதுப்பினாள் தோள்".

குறள். 1105

 "மெய்வாய்கண்மூக்குச் செவிஎன்னும் நாமங்கள் மேவப்பெற்ற
  ஐவா யினும்நின்று அருந்தின ரோஅருந் தானவர்முன்
  உய்வான்மலைகொண்டுஒலிநீர் கடைந்தஅன்றும்பர்என்போல்
  மைவார் அளக மடந்தைநின் போலும் மருந்தினையே".

அம்பி. 69

 எனவும்,

     [விரும்பிய பொழுதில் அவ்வவ் விரும்பிய பொருள்களைப் பெற்றாற்
 போலும், இப்பூவணிந்த கூந்தலாள் தோள்கள்.

     தலைவியே! தேவர்கள் உய்ய மலைகொண்டு பாற்கடல் கடைந்த அன்று
 அவர்கள் உன்னைப் போன்ற மருந்தினை என்னைப்போல
 ஐம்பொறிகளானும் நுகர்ந்தனரோ!]

     புகழ்தல்:

 "தழல்கண்டது அன்ன கலிவெம்மை ஆறத்தன் தண்ணளியால்
  நிழல்கண்ட சந்திர வாணன்தென் மாறை நிலவுஉமிழும்
  கழல்கண்டது அன்ன கதிர்முத்த மாளிகைக் காரிகைநின்
  குழல்கண்ட பின்அல்ல வோஅறல் நீருள் குளித்ததுவே".

தஞ்சை. 60

 எனவும்,

     [கலியின் வெம்மை நீங்கத் தன்கருணையால் நிழல்செய்த சந்திரன்
 மகனாகிய வாணன் மாறையிலே, ஒளிவீசும் முத்த மாளிகைக்கண் அமரத்தக்க
 காரிகையே! உன் கூந்தல் அழகைக் கண்டபின் வெளிப்படத் தோன்றும்
 விருப்பினை விடுத்துக் கருமணல் நீரில் முழுகிவிட்டது.]