அகத்திணையியல்-நூற்பா-133                             333


 

 தலைவன் தலைவியைப் "பாங்கியொடு வருக" எனப் பகர்தலும் பாங்கிற்
 கூட்டலும் ஆகிய இரண்டும் கூட்டற்கும் உரியவாம்.

     "காட்டிய" என்ற மிகையானே, தலைவன் உற்றது உரைத்தலின்
 பின்னர்ப் பாங்கனை "நின் குறையாக இது முடிக்க வேண்டும்" என்றலும்,
 கிழவோன் கழற்று எதிர் மறுத்தலின் பின்னர்ப் பாங்கனை ஆண்டுச் செலல்
 வேண்டும் என்றலும், பாங்கன் குறிவழிச் சென்ற பின்னர்த் தலைவி உருவு
 வெளிப்பட்டமை கண்டு தலைவன் கூறுதலும், அதன் பின்னர் "அவ்விடத்துக்
 காணுங் கொல்லோ?" எனத் தலைவன் ஐயுற்று இரங்கலும், பாங்கன்
 இறைவியைக் கண்ட பின்னர் அவளை எளிதில் காட்டிய தெய்வத்தை
 வணங்குதலும், தலைவன் சேறற்கு முன்னர்த் தலைவி "தலைவன்
 வருங்கொல்லோ?" என நினைத்தலும், கலவியின் மகிழ்தலின் பின்னர்ப்
 பாங்கனை உள் மகிழ்ந்து உரைத்தலும் வரவும் பெறும்.

     பாங்கனை "நின்குறையாக இதுமுடிக்கவேண்டும்" என்றல்:

    "இடிக்கும் கேளிர் நும்குறை யாக
     நிறுத்தல் ஆற்றினோ நன்றுமன் தில்ல
     ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கின்
     கையில் ஊமன் கண்ணில் காக்கும்
     வெண்ணெய் உணங்கல் போலப்
     பரந்தன்று இந்நோய் நோன்றுகொளற்கு அரிதே".

குறுந்தொகை 58 

 எனவரும்.

     [என்னை இடித்துரைக்கும் நண்பா! இதனை நின் செயலாகக் கொண்டு
 நிறைவேற்றுதல் வேண்டும். அதுவே மேதக்கது. கதிரவன் காயும் வெப்பமான
 பாறையில் கைஇல்லாத ஊமன் கண்ணினால் காக்கும் வெண்ணெய்த்திரள்
 வெப்பத்தால் உருகிப் பரவுவதுபோல, என்மனத்துப் பரவியுள்ள இந்நோய்
 பொறுத்தற்கு அரியது.]