இயற்கைப்புணர்ச்சியான் ஆதல், இடந்தலைப்பாட்டான் ஆதல், பாங்கனான் ஆதல் புணர்ந்த தலைவன், பின்னரே தெருண்டு வரைதல் தலை; அல்லாதுவிடின், இரந்து குறை உறுதற்கு உரியன் ஆதலின்,
"இரவு வலியுறுத்தோன்" என்றார்;
"காமப் புணர்ச்சியும் இடந்தலைப் படலும்
பாங்கொடு தழாஅலும் தோழியின் புணர்வும்என்று
ஆங்கநால் வகையும் அடைந்த காமமொடு
முறையான் மொழிந்திசின் மறையோர் ஆறே".
"புணர்ந்த பின்றை ஆங்கனம் ஒழுகாது
பணிந்த மொழியால் தோழி தேஎத்து
இரந்துகுறை உறுதலும் கிழவோன் மேற்றே" .
இறை. அக. 5
அங்ஙனம் வினவுவான், ஏதிலார்போல ஊரினைமுன்வினாய்ச் சிறிது உறவு தோன்றப் பெயரினைப் பின் வினாய், அவ்விரண்டினும் மாற்றம் பெறாதான், ஒன்று கெடுத்தானாகவும் அதனை அவர் கண்டார் போலவும் வினாய், அவற்றினும் மாற்றம் பெறாதான் பிறவாற்றானும் வினாவுதலின், இம்முறை வைத்தார். ஒழிந்தன ஆவன, வழி வினாதலும் மொழியாமை வினாதலும் இடைவினாதலும் பிறவும் ஆம்.
குறையுற உணர்தற்கும் இருவரும் உள்வழி அவன் வரவு உணர்தற்கும் உரிய கிளவிகள் ஐந்துமே அன்றி, அக்கிளவி நிகழ்தற்கு நிமித்தமாகிய பெட்டவாயில் பெற்றுச் சேறலும், இரவு வலியுறுத்தலும், இருவரும் உள்வழி ஒருதலையாகச் சேறலும் முதலிய தலைமகன் கூற்றுக்களும், அநுவாத முகத்தான் ஈண்டே நிகழ்தலும் கொள்க.
|
|
|
|