ஒன்றென முடித்தலான், புனம்கண்டு மகிழ்தலும் புனத்திடைக் கண்டு மகிழ்தலும் ஆகிய தலைவன் கூற்றுக்களும் ஈண்டே கொள்ளப்படும்.
எதிர்மொழி கொடுத்தல் முதலிய மூன்றும் இருவரும் உள்வழி அவன் வந்துழியே தோழி மதியுடம்படுமாற்றான் நிகழ்தலும், பெட்டவாயில் பெற்று இரவு வலியுறுத்த தலைவன், தலைவியும் தோழியும் ஒருங்கு தலைப்பெய்த செவ்வி நோக்கி யாயினும் தோழி தனித்துழி யாயினும் ஊர் பெயர் கெடுதியொடு ஒழிந்தவும் வினாய்த் தோழியை மதியுடம் படுத்துமாற்றான் நிகழ்தலும் கொள்க. என்னை?
"பெட்ட வாயில்பெற்று இரவுவலி யுறுப்பினும்
ஊரும் பெயரும் கெடுதியும் பிறவும்
நீரில் குறிப்பின் நிரம்பக் கூறித்
தோழியைக் குறையுறும் பகுதியும்." தொ. பொ. 102
"இரந்துகுறை பெறாஅது கிழவியும் தோழியும்
ஒருங்குதலைப் பெய்த செவ்வி நோக்கி
பதியும் பெயரும் பிறவும் வினாஅய்ப்
புதுவோன் போலப் பொருந்துவ கிளந்து
மதியுடம் படுத்தற்கும் உரியன் என்ப". இறை. அக. 6
எனவும் வருவன ஓத்து ஆகலான். இன்னும் சான்றோர் செய்யுட்களானும் உணர்க.
[இவ்வுரை விளக்கங்கள் இறையனார் களவியல் உரையையும் பொருட்படல நச்சினார்க்கினியர் உரையையும் கொண்டு வரையப்பட்டன.]
|
|
|
|