[கூந்தலின் புதுமணம், புது அழகு, பிறைதொழ மறுத்தல், குறைந்த உணவு, தனித்துச் செல்லுதல், செய்வன மறைத்தல், ஒருபால் சென்று நிற்றல் இவை சாதாரணச் செயல்கள் என்று விடுக்கத் தக்கன அல்ல; தலைவிக்கு ஏதோ ஒரு புதுத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.]
இனி, அவை தனித்தனி வருமாறு காட்டுதும்.
நாற்றத்தான் ஐயம்உற்று ஓர்தல்:
"கங்கைச் சடிலர் மதுரா புரீசர் கடம்பவனத்து
எங்கட்கு உளதன்றி எங்குஉள தோஇவட்கு ஆரமும் பூந்
தொங்கல் புதுமண மும்திருப் பாவைபொற் றோளும் இரு
கொங்கைக் குவடும் அளகா டவியும் குடிகொண்டதே".
[மதுராபுரேசர் கடம்பவனத்தைச் சார்ந்த இவட்கு எங்களிடம் இல்லாத அளவில் புதுமையாகச் சந்தன மணமும் பூ மணமும் எவ்வாறு உண்டாயின? இவள் தோள்களிலும் கொங்கையிலும் ஆர மணமும் தொங்கலில் புதுமலர் மணமும் ஏற்பட்டதன் காரணம் யாது?]
தோற்றத்தான் ஐயம்உற்று ஓர்தல்:
"தோளில் குழைவும் களபா சலம்தரு சோபையும்வை
வாளில் சிறந்த விழியும்கண் டால்சசி வட்டம்என்னும்
கோளில் திகழ்குடை யார்கூடல் வாழும் கொடியிடைக்கு
நாளில் புதுமை சிறந்துஒரு கோடி நலம்தருமே".
[சந்திரனை ஒத்த குடையை உடையாரின் கூடலில் வாழும் இக்குறப்பெண், தோளில் குழைவும் தனங்களில் புது ஒளியும் விழியில் தனிக்கூர்மையும் புதுமையாகப்பெற்றுப் புதுவனப்புக் கொண்டுள்ளாள்.]
|
|
|
|