அகத்திணையியல்-நூற்பா-135                             349


 

     [என்னையும் விடுத்துத் தன் தோழியர்கூட்டத்தையும் விடுத்து
 மதுராபுரியில் சோலையும்  செய்குன்றும் புக்கு இவள் தனியே நின்று
 செய்யும் தவம்தான் யாதோ?]

     செலவுகண்டு ஐயம்உற்று ஓர்தல்:

    "கரிக்கும்ப கம்பக் கடாசலத் தார்கடம் பாடவிமான்
     பரிக்கும் சிலம்பு சிலம்புபொற் பாதம் பதுமமலர்
     விரிக்கும் தவிசில் மெலநடந் தாலும் மெலிவதுஅராத்
     தரிக்கும் திருவுட லும்கன்ற வேநடை தந்ததுவே".

மதுரை. 100

 எனவும்,

     [சிவபெருமானின் கடம்பாடவியைச் சார்ந்த இம்மான் போல்வாள் தன்
 சிலம்பு ஒலிக்கும்  அடிகள் மலர்மேல் நடந்தாலும் மெலியும் நிலையள்.
 அவள் தன் அடிகளும் மெல்லிடை தாங்கும் உடலும் கன்றுமாறு
 நடக்கின்றாளே.]

     பயில்வான் ஐயம்உற்று ஓர்தல்:

    "வன்னம் தருமவு லிச்சொக்க நாதர் மதுரைஇன
     அன்னம் தனிநடை கற்பநின் றாள்தன் அமுதச்செவ்வாய்
     இன்னம் துணைமுலைப்  பால்மணம் போயின தில்லைஇவள்
     தன்னந் தனிபயி லக்கற்ற வாறுஎன்கொல் சாற்றுவதே".

மதுரை. 101

 எனவும் வரும்.

     [சொக்கநாதர் மதுரையிலே அன்னத்துக்கு நடை கற்பிக்கும்
 இத்தலைவியின் வாய் இன்னும்  பால்மணம் மாறவில்லை; அதற்குள் இவள்
 தன்னந்தனியே பயிலுவதற்கு எவ்வாறு கற்றனளோ?]

     அவ்வகை தன்னால் ஐயம் தீர்தல்:

    "முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே
     மலையன் ஒள்வேல் கண்ணி
     முலையும் வாரா முதுக்குறைந் தனளே".

 எனவரும்.