இறைவனை நகுதலும், மதியினின் அவர்அவர் மனக்கருத்து உணர்வும் என்னும் மூன்றும் இருவரும் உள்வழி அவன் வரவு உணர்தற்கும் உரியவாம்.
"உவரும் புலவும் ஒழிக்கும் கழிப்புன்னை ஒண்மலர்த்தாது
இவரும் துறை, அன்னம் மென்நடை யார் இதண் ஏற முல்லைப்
பவரும் கொடியும் படர்கொழுஞ் சாரல், பசுந்தினையைக்
கவரும் கிளியினுக்கு, இன்றுகைம் மாறுஒன்று கண்டிலமே"
[உவர்மணம் புலால் நாற்றம் இவற்றைப்போக்கும் புன்னைத் தாது பரவும் கடல்துறையிலுள்ள அன்னம்போன்ற நடையையுடைய தலைவியும் தோழியும் பரணில் ஏறுமாறு, முல்லைக்கொடி படரும் சாரலிலே தினைக்கதிரைக் கவரும் கிளிகளுக்குச் செய்யத் தக்க கைம்மாறு ஒன்றும் இல்லை.]
புனத்திடைக் கண்டு மகிழ்தல்:
"தினைக்காவல் இந்தத் திருவைவைப் பார்அந்தச் செங்கமல
மனைக்குஆர் உளர்என்று அறிந்தில ரோஅருள் மாரிவெள்ளச்
சுனைக்காவி அம்கண்ணிதோய்வார் அழகிய சொக்கர்வெற்பில்
வினைக்கா னவர்அறிவு இப்படி யோமுன் விதித்ததுவே".
எனவும் வரும். 135
[அருள்வெள்ளம் பொழியும் குவளைக்கண்ணியாகிய பார்வதியைக் கூடிய சொக்கநாதர் மலையிலே, இத்திருமகளைத் தினைக்காவலுக்கு இக்குறவர் வைத்துள்ளனரே! இவள் முன்பு தங்கியிருந்த செந்தாமரையில் வேறு யாரைத் தங்கச் செய்வர்? இவருக்கு ஆண்டவன் அறிவை இப்படி அமைத்து விட்டானே!] 135
|
|
|
|