364                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

பாங்கியிற் கூட்டத்து வகை

 508 இரந்துபின் நிற்றல்1 சேட்படை2 மடல்கூற்று3
     மடல்விலக்கு4 உடன்படல்5 மடல்கூற்று ஒழிதல்6
     குறைநயப் பித்தல்7 நயத்தல்8 கூட்டல்9
     கூடல்10 ஆயம் கூட்டல்11 வேட்டல்12 என்று
     ஈராறு வகைத்தே இகுளையின் கூட்டம்

     இது நிறுத்த முறையானே பாங்கியின் கூட்டத்தின் வகை இத்துணைத்து
 என்கின்றது.
     இ-ள் இரந்து பின்நிற்றல் முதலாக வேட்டல் ஈறாகச் சொல்லப்பட்ட
 பன்னிரண்டு வகையினை உடைத்தாம் பாங்கியின் கூட்டம் என்றவாறு.  136

விளக்கம்

 1  தலைவன் தோழியை இரந்து பின்நிற்றல்.
 2  தோழி தலைவனை அகற்ற முயறல்.
 3  தலைவன் மடல் ஏறுவதாகக் கூறல்.
 4  தோழி மடலேறுதலை விலக்குதல்.
 5  தோழி தலைவன் குறையை முடிப்பதற்கு உடன்படல்.
 6  தலைவன் மடலேறுவதாகக் கூறுவதனைத் தவிர்தல்.
 7  தலைவன் குறையைத் தலைவி விரும்பி ஏற்றுக்கொள்ளுமாறு தோழி
    கூறல்.
 8  தலைவி தோழிகூற்றுக்கு உடன்பட்டு விரும்புதல்.
 9  தலைவியைத் தலைவனிடம் சேர்ப்பித்தல்.
 10  தலைவன் தலைவியைக் கூடல்.
 11  தோழி தலைவியை ஆயவெள்ளத்தில் கொண்டுசேர்த்தல்.
 12  தலைவன் அன்று தலைவி இல்லில் விருந்தினனாக வருதற்கு
    விரும்புதல்.