"பேதையை இரந்துகுறை பெறாதுபே துற்றோன்
மடல்இனிப் பொருள்என மனங்கோ டலும்அதைக்
கடன்என உலகின்மேல் வைத்துக் கழறலும்
தன்மேல் வைத்துஇகு ளைக்குச் சாற்றலும்
தலைமகள் அவயவத்து அருமை சாற்றலும்
தலைமகன் தன்னைத் தானே புகழ்தலும்
எழுதும்முன் இரங்கலும் எழுதி இரங்கலும்
கெழுதகை பாங்கி அருள்நிலை கிளத்தலும்
கொண்டுநிலை கூறலும் என்றுஇவை ஒன்பதும்
மடல்கூற் றிற்கும் மடல்விலக் கிற்கும்
திடம்பட மொழிவர் தெளிவுடை யோரே". 37
"இளமைத் தன்மை இகுளைசெப் பலும்அவள்
வளமைத் தன்மை வருத்தியது உணர்த்தலும்
செவ்வி அருமை செப்பலும் தலைமகன்
செவ்வி எளிமை செப்பிய பின்னர்
என்னை மறைப்பின் எளிதுஎன நகுதலும்
அந்நகை பொறாது வருந்தலும் மன்னனைத்
தெளித்தலும் கையுறை அளித்ததை ஏற்றலும்
களித்தவன் உரைப்பதொடு கருதிய ஒன்பதும்
உடன்பட லுடன்மடல் கூற்றொழி தற்கும்
உடன்படும் என்பர் உரனுடை யோரே." 38
"குரிசிற்கு இன்புறக் குறைநேர் பாங்கி
அரிமதர் விழியாட்கு அவன்குறை உணர்த்தலும்
அறியாள் போன்றுஅவள் குறியாள் கூறலும்
இறையோற் கண்டமை இகுளை இயம்பலும்
இகுளை அறியாது இறைவி மறைத்தலும்
என்னை மறைப்பது என்எனத் தழாஅலும்
கையுறை புகழ்தலொடு மெய்பெற ஆறும்
மெலிதாகச் சொல்லிக் குறைநயப் பித்தற்கும்
வலிதாகக் கூறி மறுத்தற்கும் உரிய". 39