பாங்கி அறியாள்போன்று வினாதல்:
"விண்இறந் தார்நிலம் விண்டவர் என்றுமிக் கார்இருவர்
கண்இறந் தார்தில்லை அம்பலத் தார்கழுக் குன்றில்நின்று
தண்நறுந் தாதுஇவர் சந்தனச் சோலைப்பந்து ஆடுகின்றார்
எண்இறந் தார்அவர் யார்கண்ண தோமன்ன நின்அருளே"
எனவும்,
[மன்ன! பிரமனும் திருமாலும் காணமுடியாத சிவபெருமான் தங்கும் கழுக்குன்றில் சந்தனச்சோலையில் பந்தாடும் எண்ணிறந்த மங்கையருள் உன் அருள் யார்மாட்டு உள்ளது?]
இறையோன் இறைவி தன்மை இயம்பல்:
"குவவின கொங்கை குரும்பை குழல்கொன்றைகொவ்வைசெவ்வாய்
கவவின வாள்நகை வெண்முத்தம் கண்மலர் செங்கழுநீர்
தவவினை தீர்ப்பவன் தாழ்பொழில் சிற்றம் பலம்அனையாட்கு
உவவின நாள்மதி போன்றுஒளிர் கின்றது ஒளிமுகமே".
எனவும்,
[அடியார் வினைகளை மிகவும் தீர்க்கும் சிவபெருமானுடைய சிற்றம்பலம் அனையாட்குக் கொங்கை குரும்பை போல்வன; குழல் கொன்றை போல்வது; செவ்வாய்நகை முத்துப்போல்வன; கண் கழுநீர் போல்வன; முகம் நிறைமதிபோல ஒளி வீசுவதாம்.]
பாங்கி தலைவி அருமை சாற்றல்:
"நெருநலும் முன்னாள் எல்லையும் ஒருசிறைப்
புதுவை ஆகலின் கிளத்தல் நாணி
நேர்இழை வளைத்தோள் நின்தோழி செய்த
ஆர்அஞர் வருத்தம் களையா யோஎன
|
|
|
|