380                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     என்குறை உறுதிர் ஆயின் சொல்குறை
     எம்பதத்து எளியள் அல்லள் எமக்குஓர்
     கண்காண் கடவுள் அல்லளோ பெரும
     ஆய்கோல் மிளகின் அமலைஅம் கொழுங்கொடி
     துஞ்சுபுலி வரிப்புறம் தைவரும்
     மஞ்சுசூழ் மணிவரை மன்னவன் மகளே."

இறை. 12 மேற் 

 எனவும்,

     [நேற்றும் முதல்நாளும் இப்பக்கல் வந்து, புதியவர் ஆதலின்
 உரையாடற்கு நாணி, இன்று, "உன்தோழி எனக்குச் செய்துள்ள அரிய
 துயரத்தை நீங்க மாட்டாயா?" என்று என்னிடம் குறை வேண்டுகிறீர்.
 யாம் கூறி உடன்படுவிக்கும் அளவிற்கு, மிளகுக்கொடி, தூங்கும் புலியின்
 கோடுகள் உடைய முதுகைத் தடவிக்கொடுக்கும் மலைநாட்டு மன்னன்
 மகளாகிய அவள் எளியள் அல்லளாய், எமக்குக் கண்ணால் காணப்படும்
 கடவுள்போல உள்ளாள்.]

     தலைவன் இன்றியமையாமை இயம்பல்:

    "பொருளா எனைப்புகுந்து ஆண்டு புரந்தரன் மால்அயன்பால்
     இருளாய் இருக்கும் ஒளிநின்ற சிற்றம் பலம்எனலாம்
     சுருள்ஆர் கருங்குழல் வெண்ணகைச் செவ்வாய்த்துடிஇடையீர்
     அருளாது ஒழியின் ஒழியாது அழியும்என் ஆர்உயிரே"

திருக்கோவை 73 

 எனவும்,

     [என்னை ஒருபொருளாகக் கொண்டு ஆண்டு, இந்திரன் அரி அயன்
 ஆகியோர் காண இயலாதவனாய் உள்ள பெருமானுடைய சிற்றம்பலம்
 அனைய துடிஇடையீர்! நீங்கள் அருள் செய்யாது விடுப்பின், என் அரிய
 உயிர் தவறாது அழிந்துவிடும்.]