பாங்கி நின்குறை நீயே சென்று உரை என்றல்:
"அந்தியின் வாய்எழி லம்பலத்து எம்பரன் அம்பொன்வெற்பில்
பந்தியின் வாய்ப்பல வின்சுளை பைந்தே னொடும்கடுவன்
மந்தியின் வாய்க்கொடுத்து ஓம்பும் சிலம்ப மனம்கனிய
முந்தி நின்வாய்மொழி நீயேமொழிசென்று அம்மொய்குழற்கே"
எனவும் வரும்,
[செவ்வான மேனியன்ஆகிய அம்பலன் மலையிலே, மந்தியின்வாயில் பலாச்சுளைகளைத்
தேனோடும் கடுவன் கொடுத்துக் காக்கும் சிலம்பனே! தலைவியின் மனம் கனியுமாறு உன்கூற்றை நீயே சென்று அவட்குக் கூறு.]
பாங்கியைத் தலைவன் பழித்தல்:
"மாதர் குறைமுடிக்க வல்லாமை வல்லைஎனக்
காதல் சிறப்பக் கருதியது-மேதகைய
பாம்பு அடுதேர் அல்குல் பயம்படுநீர் மானமான்
தேம்படுதேர் மீது செலல்".
எனவரும்.
[தோழியே! தலைவியின் பொருட்டு யான் வேண்டுவதனை முடிக்கும் ஆற்றல் அற்ற உன்னைத் தக்கவள் என்று அன்பு சிறக்கக் கருதியது, மான் கானல் நீரை உண்மையான நீர் என்று கருதிச் செல்வதனை ஒக்கும்]
பாங்கி பேதைமை ஊட்டல்:
"நறுந்தண் தகரம் வகுளம் இவற்றை
வெறும்புதல்போல் வேண்டாது வெட்டி-எறிந்துழுது
செந்தினை வித்துவார் தங்கை பிறர்நோய்க்கு
நொந்துஇனைய வல்லளோ நோக்கு."
|
|
|
|