அகத்திணையியல்-நூற்பா-137                              383


 

 என்னை மறைத்து ஒழுகியவள், யான் மறை உணர்ந்ததை அறியின்
 என்னை வெகுளலும் கூடும். ஆதலின் மறையை யான் அறியாதது
 போல்வேனாக; நீ முன்புபோல நேரிடையாக அவள் தொடர்பைத்
 தொடர்ந்து கொள்க.]

     தன்நிலை தலைவன் சாற்றல்:

    "தோளும் கூந்தலும் பலபா ராட்டி
     வாழ்தல் ஒல்லுமோ மற்றே செங்கோல்
     குட்டுவன் தொண்டி அன்ன
     என்கண்டு நயந்துநீ நல்காக் காலே".

ஐங்குறுநூறு 178 

 எனவரும்.

     [செங்கோலனாகிய குட்டுவனுடைய தொண்டியைப் போன்ற இயற்கை
 அழகுடைய நீ, என் நிலையைக்கண்டு உதவாய்ஆயின், யான் இனித்
 தலைவியின் தோள்களையும் கூந்தலையும் பலவாகப் பாராட்டி அவள்
 தொடர்புகொண்டு வாழ்தல் நிகழக்கூடிய செயல் ஆகுமோ?]

     பாங்கி உலகியல் உரைத்தல்:

    "கோடுஈர் எல்வளைக் கொழுமடல் கூந்தல்
     ஆய்தொடி மடவரல் வேண்டுதி யாயின்
     தெண்கழிச் சேயிறாஅப் படூஉம்
     தண்கடல் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ".

ஐங்குறுநூறு 196 

 எனவரும்.

     [சங்குவளையலையும் பூ முடித்த கூந்தலையும் அழகிய தொடியினையும்
 உடைய தலைவியைக் கோடல்வேண்டின், கழிகளில் இறாமீன் பிடிக்கப்படும்
 நெய்தல் நிலத்தலைவனே! அவளை மணந்துகொண்டு தொடர்பு
 கொள்வாயாக.]