384                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     தலைமகன் மறுத்தல்:

    "சிலைமேல் முகில்அன்ன நன்னுதல் மீது செறிகுழலாள்
     முலைமேல் முயங்குவன் நீசொன்ன வாறு முழுமணியின்
     கலைமே லணிதழை அல்குல்நல் லாய்முன் கவிகொணர்ந்த
     மலைமேல் மருந்துவந் தோதலை மேல்விடம் மாற்றுவதே".

அம்பி. 111 

 எனவும்,

     [மேகலைமீது தழைஉடை அணிந்துள்ள தோழியே! வில்மேல் தங்கும்
 முகில்போல நெற்றிமேல் அமைந்த கூந்தலைஉடைய தலைவியை நீ
 கூறியவாறு வரைந்துகொண்டு தொடர்பு கொள்வது, தலைக்கு ஏறியவிடத்தை
 விரைந்து போக்குவதற்குச் சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவர முயல்வதனை
 ஒக்கும்.]

     பாங்கி அஞ்சி அச்சுறுத்தல்:

    "முனிதரும் அன்னையும் என்ஐயர் சாலவும் மூர்க்கர்இன்னே
     தனிதரும் இந்நிலத்து அன்றுஐயகுன்றமும்தாழ்சடைமேல்
     பனிதரு திங்கள் அணிஅம் பலவர் பகைசெகுக்கும்
     குனிதருதிண் சிலைக்கோடுசென்றான் சுடர்க்கொற்றவனே."

திருக்கோவை 98 

 எனவும்,

     [வேலவனே! சந்திரனைச் சூடிய சிவபெருமான் திரிபுரத்தை
 அழிக்கக்கொண்ட மேருபோன்ற மேலைமலைச் சிகரத்தைக் கதிரவன்
 அடைந்துவிட்டான் இனிக்காலம் தாழ்த்தின் எம்தாயர் வெகுள்வர்; எம் ஐயர்
 மிகக்கொடியர். இனி, தனித்துக் காலம் தாழ்த்திப் போதல் கூடாது. எங்கள்
 மலையும் இந்நிலத்தில் இல்லை. சற்றுச் சேய்மையில் உள்ளது.]