390                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     பாங்கி அருளியல் கிளத்தல்:

 "நடன்நாம் வணங்கும்தொல் லோன்எல்லை நான்முகன் மால்அறியாக்
  கடனாம் உருவத்து அரன்தில்லை மல்லல்கண் ஆர்ந்தபெண்ணை
  உடனாம் பெடையொடு ஒண்சேவலும் முட்டையும் கட்டழித்து
  மடல்நாம் புனைதரின் யார்கண்ண தோமன்ன இன்னருளே."

திருக்கோவை. 97  

 எனவும்,

     [கூத்தனாய் நாம் வணங்கும் தொல்லோனாய், நான்முகன் மால்
 ஆகியோர் அறியாவடிவனாகிய சிவபெருமானின் தில்லையிலே மடல்மா
 அமைப்பதற்குப் பறவைகளும் முட்டைகளும் செறிந்து இருக்கும்
 பனைமரத்தை வெட்டினால், அவற்றிற்கு ஊறு நிகழும் ஆதலின், அஃது
 அருளுடையாருக்கு இயைவது அன்றாம்.]

     பாங்கி கொண்டுநிலை கூறல்:

 "ஊர்வாய் ஒழிவாய் உயர்பெண்ணைத்திண்மடல் நின்குறிப்புச்
  சீர்வாய்ச் சிலம்ப திருத்த இருந்திலம் ஈசர்தில்லைக்
  கார்வாய் குழலிக்கு உன் ஆதரவுஓதிக்கற் பித்துக்கண்டால்
  ஆர்வாய் தரின்அறி வார்பின்னைச் செய்க அறிந்தனவே."

திருக்கோவை. 80  

 எனவும் வரும்.

     இறந்துபடுவானை இச்சொல் தாங்கிக்கொண்டு நின்றமையின்,
 கொண்டுநிலை ஆயிற்று.

     [வெற்பனே! நீ மடல் ஊரினும் ஊர்க; விடுப்பினும் விடுக்க; உன்
 கருத்தை மாற்ற யாம் விரும்புகிலம். தில்லையிலே உள்ள தலைவிக்கு
 உன்விருப்பத்தை எடுத்து உரைக்கிறேன். அவள் அதனை நிறைவேற்ற
 உடன்படுதலும் ஆம்; அதனை அறிந்தபின் நீ மடல்ஊர்தல் பற்றித்
 திட்டமிட்டுச் செயற்படுக.]