392                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

  உற்றிலள் உற்றது அறிந்திலள் ஆகத்து ஒளிமிளிரும்
  புற்றில வாள்அர வன்புலி யூர்அன்ன பூங்கொடியே".

திருக்கோவை 97  

 எனவும்,

     [மார்பில் பாம்புகளை அணிகலனாகத் தரித்த சிவபெருமானுடைய
 புலியூரை ஒத்த தலைவி இன்று மனம் ஒருவகையாக உள்ளாள். அன்னம்
 தன் நடையைக் கற்கவும், மான் தன் கண்அழகைக் கண்டுகொள்ளவும், கிளி
 தன் பேச்சைக் கேட்டுப் பழகவும் வாய்ப்பு அளிக்கும் வகையில் இன்று
 தலைவி விளையாட்டின்கண் ஈடுபடவில்லை; மேலும், யான் நுமக்குக் குறை
 நேர்ந்தவாறும் இன்னும் அறிந்திலள்]

     தலைவன் செவ்வி எளிமை செப்பல்:

 "தேன்வந்த ஆயிதழ்ச் சேயிழை யாய்இன்ன செவ்விநவ்வி
  மான்வந்த வாள்விழி வஞ்சிக்கு நீதஞ்சை வாணன்வெற்பில்
  யான்வந்த வாசென்று இயம்புதி யேல்அவர் யாவர்என்னாள்
  தான்வந்து அவாவுடனே நின்னை ஆரத்தழீஇக்கொள்ளுமே".

தஞ்சை 111  

 எனவும்,

     [இன்சொல் தோழியே! மான் விழித் தலைவிக்கு நீ தஞ்சைவாணன்
 வெற்பில் யான் வந்துள்ள செய்தியைத் தெரிவிப்பாயாயின், "வந்துள்ளவர்
 யாவர்?" என்று கூடவினவாது, அன்போடு வந்து உன்னைத்
 தழுவிக்கொள்ளுவாள்.]

     பாங்கி என்னை மறைப்பின் எளிதுஎன நகுதல்:

 "பண்டுஆல் இயலும் இலைவளர் பாலகன் பார்கிழித்துத்
  தொண்டால் இயலும் சுடர்க்கழ லோன்தொல்லைத் தில்லையின்வாய்
  வண்டுஆல் இயலும் வளர்பூந் துறைவ மறைக்கில்என்னைக்
  கண்டால் இயலும் கடன்இல்லை கொல்லோ கருதியதே".

திருக்கோவை. 105  

 எனவும்,