[ஆலிலையில் கண்வளரும் திருமால் உலகை இடந்தும் காண இயலாது, பின் தொண்டுசெய்து காணும் கழலோனாகிய சிவபெருமானின் தில்லையைச் சார்ந்த வண்டு ஒலிக்கும் பூந்துறைவ! என்னை மறைப்பின் நீ கருதியது முடிக்கும் முறைமை இல்லைபோலும்!]
[நெற்றிக்கண்ணனாய்ச் சொல்லும் அளவைக் கடந்து ஊறும் அமுதம்போல என் உள்ளத்துச் சேர்ந்து என்னை ஆட்கொண்ட சிவபெருமானுடைய தில்லையை ஒத்து ஒளி வீசும் பற்களை உடைய பெருந்தோளி ஆகிய தோழி! நின் முகமாகிய மதியின்கண் உண்டாகிய சதுரப்பாட்டினை உடைய கருணைப் பார்வையே இன்று எனக்குச் சிறந்ததுணையாகும்.]