[திரிபுரத்தை அழித்து என்னை ஆட்கொண்ட செக்கர் மேனிப் பெருமானுடைய கயிலைமலையின்மேன் அன்றி வேறு இடங்களில், அருளே காரணமாகத் தலைவன் கொணர்ந்து நமக்கு எளிதாக தந்துள்ள இத்தழை காண்பது அரிது.]
தோழி கிழவோன் துயர்நிலை கிளத்தல்:
"மைத்தழை யாநின்ற மாமிடற்று அம்பல வன்கழற்கே
மெய்த்தழை யாநின்ற அன்பினர் போல விதிர்விதிர்த்துக்
கைத்தழை ஏந்திக் கடமா வினாய்க்கையில் வில்இன்றியே
பித்துஅழை யாநிற்ப ரால்என்ன பாவம் பெரியவரே"
[நீலகண்டனான சிவபெருமான் திருவடிக்கே பித்துக் கொண்ட அன்பர்போல, மெய்நடுங்கிக்கொண்டு கையில்தழை ஏந்தித் தன் அம்பு பட்ட யானையை வினவிக் கையில் வில் இன்றிப் பெரியோன்
ஒருவன் பித்தன் போலப் பேசுகிறான்; என்ன பாவமிது!]
மறுத்தற்கு அருமை மாட்டல்:
"நீகண் டனைஎனின் வாழலை நேரிழை அம்பலத்தான்
சேய்கண் டனையன் சென்று ஆங்குஓர் அலவன்தன் சீர்ப்பெடையின்
வாய்வண்டு அனையதுஒரு நாவல் கனிநனி நல்கக்கண்டு
பேய்கண் டனையதுஒன் றாகிநின் றான்அப் பெருந்தகையே."
[நேரிழையே! சிவபெருமான் மகனாகிய முருகனைப் போன்ற தலைவன், நண்டு ஒன்று தன் பெடைநண்டின் வாயில் வண்டுபோல்வது ஒரு நாவற்கனியை உண்ணக் கொடுத்தனைக் கண்டு, பேயைக் கண்டவனைப் போலப் பித்துக் கொண்டு நின்றான். அதனை நீ கண்டிருந்தால் உயிர்வாழ மாட்டாய்.] |
|
|
|