"பொன்றாத காதல் பொறைஅறும் ஆவி புலம்பிநைய
இன்றுஆ ருயிர்இன்றி இருந்தனன் யான்இக் குருந்திடையே
குன்றாத அன்பொடு கூடியும் வாடியும் கோலம்கொண்டு
சென்றார் மணிநெடுந் தேருடன் போனதுஎன் சிந்தையுமே"
[அழியாத காதலால் பிரிவைப் பொறுத்தல் ஆற்றாத என்உயிர் புலம்பி
வருந்த இன்று உயிரற்றள்போல யான் உள்ளேன்; இக் குருந்த
மரங்களிடையே குறையா அன்போடு கூடியும் வாடியும் என் அழகைக்கைக் கொண்டு சென்ற தலைவனது தேருடன் என் உள்ளமும் சென்றுவிட்டது.]
பாங்கி தலைவியைச் சார்ந்து கையுறை காட்டல்:
"பொன்அனையான் தில்லைப்பொங்கு அரவம்புன் சடைமிடைந்த
மின்அனை யான்அருள் மேவலர் போல்மெல் விரல்வருந்த
மெல்நனை ஆய்மறி யேபறி யேல்வெறி ஆர்மலர்கள
இன்னன யான்கொணர்ந்தேன்மணம் தாழ்குழற்கு ஏய்வனவே
[மான் அனையாய்! தில்லைப்பிரான் அருள் மேவப்பெறாதவர் போல உன்மெல்லிய விரல்கள் வருந்த மெல்லிய மொட்டுக்களைப் பறிக்காதே;
யான் உன்கூந்தலுக்குப் பொருத்தமான, நறுமண மலர்கள் இவற்றைக் கொய்துகொண்டு வந்துள்ளேன்? என்று தோழி, தலைமகனைப் பிரிந்த பிரிவாற்றாமையாலும், தலைமகன் புணர்ச்சி நீக்கத்துக்கண் தன்னைக் கோலம் செய்த அக்கோலத்தைத் தோழி காணாநின்றாள் என்ற பெருநாணினாலும் ஆற்றாளாய் மயங்கி மலரைப் பறிப்பதற்கு மாறாக மொட்டினைப் பறித்துக் கொண்டிருந்த தலைவியிடம் கூறியவாறு.] |
|
|
|