கனம்காவல் கொண்ட கழைஇருஞ் சாரல் கனங்குழைநின்
புனங்காவல் மாற்று மதன்பின்னர்க் காவலும் பூணும்வந்தே".
[தலைவியே! உன் மனத்தைத் தலைவனிடம் வைத்துப் பறவைகளின் இனங்கள் தினை கவராமல் பாதுகாவாது விடுத்துள்ள தினைப்புனத்தைக் கண்டால், அன்னை எப்படியும் மேகத்தை அளாவிய மூங்கில்களை உடைய மலைச்சாரலில் உன்னைப் புனங்காவலில்இருந்து நீக்கிவிட்டுப் பின்னை உனக்கு இற்செறிப்பும் அளித்துவிடுவாள்.]
நீங்கற்கு அருமை தலைவி நினைந்து இரங்கல்:
"இமையாத வேழம்ஓர் எட்டும் குலகிரி ஏழும்முற்றும்
சுமைஆற வந்துஅரு ளும்தொண்டை மான்கப்பல் தோகைஅன்னீர்
அமையாத அன்புதந்தார் பிரிந்தால் அரிது ஆற்றுவதுஎன்று
உமையாள் அறிந்து அல்லவோசிவந் தாள்தன் ஒருபக்கமே".
[எட்டுக்குலயானைகளும் ஏழுகுலமலைகளும் தம்சுமை நீங்கத் தோன்றி அருள்செய்யும் தொண்டைமானுடைய கப்பலைச் சேர்ந்த மயில் அன்னீர்! "அன்பரைப் பிரிந்தால் ஆற்றுவது அரிது" என்று கருதியே உமையாள் தன் ஒரு பகுதியாகச் சிவபெருமானைப் பிரிவு அறக் கொண்டுள்ளாள். தோகை அன்னீர் என்ற பன்மை இழித்தற்கண் வந்தது]
தலைவிக்கு அவன்வரல் பாங்கி சாற்றல்:
"சேண்ஆர் கொடிநெடுந் தேர்மணி ஓசை செவிப்படும்இவ்
வாள்நாக மேல்வரு கின்றனர் போலுவர் வந்துநம்மைக்
காணாது அலமரும் துன்பமும் காதலும் காணஇங்ஙன்
நீள்நாக நீழல் மறைகுவம் போலும் நிரைவளையே".
|
|
|
|