[தலைவியே! தலைவனுடைய தேர்மணிகளின் ஓசை கேட்கிறது. இவ்வொளி மிக்க மலையை நோக்கி வருகின்றார் போலும். வந்து நம்மைக் காணாமல், மனம் சுழலும் துன்பத்தையும் அவர் அன்பையும்காண, நாகமரநிழலிலே இப்படிச் சிறிது மறைந்திருப்போம்.)
தோழி சிறைப்புறமாகத் தலைமகற்குச் செறிப்பு அறிவுறுத்தல்:
"இயலும் கலவ மயிலும்மென் மானும் இனக்கிளியும்
முயலும் தவங்கள் முடிவது போலும் முதுமறலி
செயலும் கமலமும் செங்கழு நீரும் செழியர்வெற்றிக்
கயலும் பொருகண்நல் லாய்இன்று நாளைக் கடிபுனத்தே".
[இயமனுடைய செயலும் கமலமும் கழுநீரும் பாண்டியர் தம்கயலும் ஒத்த கண்களை உடையாய்! இன்று நாளை இக்காவலை உடைய புனத்தே, மயிலும் மானும் கிளியும் முயன்று செய்யும் தவங்கள் முடிந்துவிடுவனபோலும்!]
தோழி முன்னிலைப் புறமொழி மொழிந்து இல்செறிப்பு உணர்த்தல்:
"பயில்காள பந்திப் புயல்அன்ன ஓதியைப் பைங்கிள்ளைகாள்
மயில்காள் சிறிதும்மறக்கப் பெறீர்தஞ்சை வாணன் வெற்பில்
குயில்காள் எங்கும் இயம்புதண் சோலையில் கூடிஇன்ப
மயில்காள் வெங்கதிர் வேல்அன்பர் சால அயர்ப்பினுமே".
[கிளிகாள்! மயில்காள்! தஞ்சைவாணன் வெற்பில் குயில்காள்! சோலையில் கூடின மயில்காள்! கார்மேகம் போன்ற கூந்தலை உடைய தலைவியைத் தலைவன் மறப்பினும், நீங்கள் சிறிதும் மறவாதீர்கள் ஆகுக.]
|
|
|
|