பாங்கி தலைவியைக் குறியிடத்துக் கொண்டுசேறல்:
விண்ணுக்கு மேல்வியன் பாதலக் கீழ்விரி நீர்உடுத்த
மண்ணுக்கு நாப்பண் நயந்துதென் தில்லைநின்றோன் மிடற்றின்
வண்ணக் குவளை மலர்கின் றனசின வாள்மிளிர்நின்
கண்ஒக்கு மேல்கண்டு காண்வண்டு வாழும் கருங்குழலே.
[கருங்குழலே! விண்ணுக்கு மேலாகவும் பாதலத்துக்கும் கீழாகவும் உலகின் நடுவிலும் விரும்பித் தில்லையில் நிற்கும் சிவபெருமான நீலகண்டத்தைப்போல மலர்ந்துள்ள குவளைப் பூக்கள் நின்கண்களை ஒத்துள்ளனவா? என்பதனைக் கண்டு ஒப்பிட வந்து காண்பாயாக]
பாங்கி தலைவியைக் குறியிடத்து உய்த்து நீங்கல்:
நந்தீ வரம்என்னும் நாரணன் நாள்மலர்க் கண்ணிற்குஎஃகம்
தந்துஈ வரன்புலி யூர்அனை யாய்தடங் கண்கடந்த
இந்தீ வரம்இவை காண்நின் இருள்சேர் குழற்குஎழில்சேர்
சந்துஈ வரமுறி யும்வெளி வீயும் தருகுவனே.
["சிவபெருமானே! வரம் தருக" என்று திருமால் தன் கண் இடந்து அருச்சிக்க அதற்குச் சக்கரம் வழங்கிய சிவபெருமானுடைய புலியூர் அனையாய்! உன் கண் அழகை ஒத்த அழகுடைய நீலமலர்கள் இவை; உன் கூந்தலுக்கு ஏற்ற சந்தனத்தளிர்களையும் நறுமணம் மிக்க மலர்களையும் சென்று கொய்து மீள்வேன்.]
தலைவன் தலைவியைக் குறியிடத்து எதிர்ப்படுதல்:
காமரை வென்றகண் ணோன்தில்லைப் பல்கதி ரோன்அடைத்த
தாமரை இல்லின் இதழ்க்கத வம்திறந் தோதமியே
பாம்அரை மேகலை பற்றிச் சிலம்புஒதுக் கிப்பையவே
நாம்அரை யாமத்துஎன் னோவந்து வைகி நயந்ததுவே.
|
|
|
|