ஆகம் செறிந்த முலைக்கும்முன் தோற்ற அடல்எயிற்று
நாகங்கள் என்னை நலிவுசெய் யாஉம்கண் அன்பன்என்றே.
[மேகம் போன்ற கூந்தலையும், ஒளி வீசும் வேற்கண்களையும் பிறைபோன்ற நெற்றியையும் உடையாய்! உன் அல்குல் வனப்பிற்குத் தோற்ற பாம்புகளும் நகில்வனப்பிற்குத் தோற்ற கொம்புகளை உடைய யானைகளும், என்னை உன் அன்பன் என்று கொண்டு துன்புறுத்த மாட்டா,]
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு. குறள். 1107
அரிஆர் மதர்விழி ஆலம்அன் னீர்சொல் அமுதம்அன்னீர்
புரிஆர் தளைஅவிழ் பூமலர்க் காவில் புணர்ந்து இங்ஙனே
தரியாத அன்பு தயங்க முயங்குந் தகைபகலும்
பிரியாமல் இங்குஎவர்க் கும்தெரி யாவிஞ்சை பெற்றிலமே.
[தம் இல்லத்தில் இருந்துகொண்டு தாம் ஈட்டிய பொருள்களைப் பிறருக்கும் பகுத்துக்கொடுத்து உண்டாற் போன்ற இன்பம்தரும், தலைவியைத் தழுவுதல் என்பது.
விழியால் நஞ்சத்தை ஒப்பாய்! சொல்லால் அமுதத்தை ஒப்பாய்! "பூமலர்க்காவில், இவ்வாறு பிரிவாற்றாமை தரும் அன்புசிறக்க, இவ்விரவு போன்று பகலும் தழுவிக்கொண்டு இருப்பதற்கு, ஒருவர் கண்ணுக்கும் நாம் புலப்படாது இருப்பதற்கு உரிய மாய வித்தையைக் கற்கவில்லையே!" என்று வருந்துகிறேன்.]
|
|
|
|