தான்குறி மருண்டமை தலைவி பாங்கிக்கு உணர்த்தல்:
அணிகடல் தண்சேர்ப்பன் தேர்ப்பரிமாபூண்ட
மணிஅரவம் என்றெழுந்து போந்தேன்-கனிவிரும்பு
புள்அரவம் கேட்டுப் பெயர்ந்தேன் அணியிழாய்
உள்ளுடை நெஞ்சினேன் யான்.
["தோழி! நெய்தல்நிலத் தலைவனின் தேரில் பூட்டப்பட்ட குதிரைகளின் மணிஒளிபோலும்" என்று கருதி இரவுக்குறிக்கண் சென்ற யான், கனியை விரும்பும் பறவைகளின் ஒலியையே கேட்டு மனம் உடைந்து மீண்டு வந்துவிட்டேன்.]
பாங்கி தலைவன் தீங்கு எடுத்துஇயம்பல்:
கொடுமுள் மடல்தாழைக் கூம்புஅழித்த வெண்பூ
இடையுள் இழுதுஒப்பத் தோன்றிப்-புடைஎல்லாம்
தெய்வம் கமழும் தெளிகடல் தண்சேர்ப்பன்
செய்தான் தெளியாக் குறி.
[கொழுவிய முட்களோடு கூடிய மடல்களை உடைய தாழையின் மலர்ந்த பூக்கள் தம் நடுவே வெண்ணெய் போல வழவழப்பான பொகுட்டுகள் தோன்றப்பெற்று நாற்புறமும் இனிய மணம் கமழும் நம்நெய்தல்நிலத் தலைவன் தெளிவில்லாதவாறு குறிப்புச் செய்துள்ளான்.]
நம்போல் எளியவர் இல்லைநெஞ் சேஇந்த நானிலத்தில்
வம்புஓட வென்ற வனமுலை மாதற்கு மாளிகைஇன்று
அம்போ ருகம்என்று அறிந்தும்வம் பேஎனை நீஅலைத்து
வெம்போ தகம்திரி கங்குல்என் னோஇங்கு மேவியதே.
|
|
|
|