458                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     இறைவன்மேல்பாங்கி குறிபிழைப்பு ஏற்றல்:

     காமம் கடவ உள்ளம் உளைய
     யாம்வந்து காணும் பருவ மாயின்
     ஓங்கித் தோன்றும் உயர்வரைக்கு
     யாங்குஎனப் படும்நுமது ஊரே தெய்யோ.

 எனவும் வரும்.                               இஃது ஐங்குறுநூறு 237

     [காமம் செலுத்துகையினாலே மனம் வருந்த, அது பொழுது வீட்டில்
 இருக்கவேண்டிய யாங்களே உன்னைத் தேடிக்கொண்டு வரும் நிலை
 ஏற்படுமாயின், ஓங்கித் தோன்றும் மலைப்பகுதியிலே உன் ஊர் யாங்கு
 உள்ளது? என்பதை எங்களுக்குத் தெளிவாக உரைப்பாயாக.]

     இறைவிமேல் இறைவன் குறிபிழைப்பு ஏற்றல்:

     மழைவரவு அறியா மஞ்ஞை ஆலும்
     அடுக்கல் நல்லூர் அசைநடைக் கொடிச்சி
     தான்எம் மறந்தனள் ஆயினும்
     யாம்தன் உள்ளுபு மறந்துஅறி யேமே.

 எனவரும்.                                  இஃது ஐங்குறுநூறு 298

     [மழை பெய்யப் போதலைக் கார்மேகங்களான் அறிந்து மயில்கள்
 ஆடும் பக்கமலைகளுக்கு இடைப்பட்ட நல்ல ஊரில் உள்ள மெல்லிய
 இயல்பினை உடைய தலைவி தான் என்னை மறந்தாளாயினும், யான்
 அவளை இடைவிடாது நினைத்துக் கொண்டிருப்பதால் ஒரு போதும்
 அவளை மறந்துஅறியேன்]

     அவள் குறிமருண்டமை அவள் அவற்கு இயம்பல்:

  கடுங்கால் எறியக் கயத்துஉகு மாவின் கனியைஎல்லாம்
  ஒடுங்கா அரவுஅல்குல் உன்குறி யாக உளம்மகிழ்ந்து
  நடுங்குஆர் இருள்வந்துநாள் மலர்ச்சோலையின் நண்ணியபின்
  அடும்காய் களிற்றண்ணலே எண்ணுமாறுஓர் அளவுஇல்லையே.

                                                    அம்பி. 229