464                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     [உலகம் உய்ய வந்துஅருளும் வாணனுடைய தென்மாறையைச் சார்ந்த
 நம் தலைவர் அச்சம் தரும் வேல் ஏந்தி வந்தால், தங்கள் தலைவனாகிய
 முருகனே வந்துவிட்டான் என்று உட்கொண்டு, நடுஇரவிலும், கொடிய
 முட்களும் பொன்போன்ற நிறம் உடைய கால்களும் வளைந்த அலகும்
 சிவந்த உச்சிக் கொண்டையும் உடைய கோழிச்சேவல்கள் மகிழ்ச்சியால் கூவி
 ஊரைத் துயில் எழுப்புகையினாலே, நம் இரவுக்குறிக்கு இடையூறு
 உண்டாகிவிட்டது)

     இவற்றுள், இறைவிக்கு இகுளை இறைவரவு உணர்த்துழித்
 தான்குறி மருண்டமை தலைவி அவட்கு உரைத்தல் முதலாக என் பிழைப்பு
 அன்று என இறைவி நோதல் ஈருகக் கிடந்த பதினொன்றும் அல்லகுறிக்கும்,

     தாய் துஞ்சாமை முதலாகக் கோழி குரல் காட்டல் ஈறாகக் கிடந்த ஏழும்
 வருந்தொழிற்கு அருமைக்கும் உரிய எனக்கொள்க.                  147

வரைதல்வேட்கையின் வகை

 520 அச்சம் உவர்த்தல் ஆற்றா மைஎன
     மெச்சிய வரைதல் வேட்கைமூ வகைத்தே.

     இது, நிறுத்தமுறையான வரைதல்வேட்கை வகை இத்துணைத்து
 என்கின்றது.

     இ-ள் அச்சமும் உவர்த்தலும் ஆற்றாமையும் என மூன்று வகையினை
 உடைத்தாம், வியக்கத்தக்க வரைதல் வேட்கை என்றவாறு.

 அச்சம் - களவு வெளிப்பட்டு விடுமோ என்று தலைவி அஞ்சும் அச்சம்.

 உவர்த்தல் - அச்சம் காரணமாகக் களவுப்புணர்ச்சியை வெறுத்தல்.