அகத்திணையியல்-நூற்பா எண்-147                         471


 

     அநுவாத முகத்தான் பாங்கி தலைவியைப் பருவரல் வினாதலும்
 வரப்பெறும். அதற்குச் செய்யுள்:

     மீன்அறி யாத விரிகடல் போலும் விழிபசந்து
     தூநெறி ஆர்குழல் போதும் துறந்தனை துங்கம்மலி
     வான்அறி யாத மதிமுகத்தாய்இன்றைவைகல் என்றும்
     யான்அறி யாத வருத்தம்என் னோஉனக்கு எய்தியதே.

           அம்பி. 237 

 எனவரும்.

     [மதிமுகத்துத்தலைவியே! கடல்போன்ற கரிய விழிகள் பசப்புற்று
 சுருண்ட நின் கூந்தலில நீ பூக்களும் அணியவில்லையே. இன்று உனக்கு
 இதற்குமுன் இல்லாதபடி என்ன வருத்தம் வந்துள்ளது? அஃது எனக்கும்
 புலனாகவில்லையே!]

     பருவரல் வினவிய பாங்கிக்கு அருமறை இறைவி செவிலி அறிந்தமை
 கூறல்:

     துறைவன் துறந்தெனத் துறைஇருந்து அழுதஎன்
     மம்மர் வாள்முகம் நோக்கி அன்னைநின்
     அவலம் உரைஎன் றனளே கடல்என்
     பஞ்சாய்ப் பாவை கொண்டு
     வண்டல்அஞ் சிறுமனை சிதைத்ததுஎன் றேனே.

தொல். பொ. ந மே. 

 எனவும்,

     [தலைவன் பிரிந்தானாகக் கடல்துறையில் இருந்து அழுத என் மயங்கிய
 முன்பு ஒளிபெற்று அப்பொழுது ஒளியிழந்த முகத்தை நோக்கிச் செவிலி என்
 வருத்தம்பற்றி வினவினாளாக, 'கடல் அலைகள் என் மணல்வீட்டை
 அழித்துப் பஞ்சாய்க் கோரையால் செய்திருந்த பாவையை அடித்துக்
 கொண்டு போனதால வந்த வருத்தம்' என்று கூறினேன்.]