வான்தோய் மாமலைக் கிழவனைச்
சான்றோய் அல்லை என்றனம் வரற்கே. நற். 365
எனவும்,
[கடுமையாக நம்மை இற்செறித்துவைத்திருக்கும் செவிலித்தாயின்
காவலைக் கடந்து பெரிய வீட்டு வாசற்படியைக் கடந்து ஊர்ப்பொதுஇடத்தை
அடைந்து, பகற்பொழுதிலேயே, பலரும் காணுமாறு, நம் நாணத்தை நீத்து,
அகன்ற மனைக்கொல்லைகளை உடைய தலைவனுடைய ஊரின் பெயரை
வினவி, பலநாளும் இடிமின்னல் முதலியவற்றின் தொகுதிகளை உடைய மழை
பெய்யாது போயினும் அருவிகளில் நீர் செறிந்த பரந்த இடத்தை உடைய
வானளாவிய மாமலைத் தலைவனை நேரில் கண்டு, 'நீ சான்றவனாகச்
செயற்படவில்லை' என்று கூறிவருதலுக்குப் புறப்படுவோம்; எழுவாயாக]
பாங்கி இறைவனைப் பழித்தல்:
சுறவுஆர் நறுங்குழைத் தூநகை யாய்நம் துணைவருடன்
இறவுஆர் குருகுஇனம் தங்குபைங் கானலில் இன்அளிசூழ்
நறவுஆர் மலர்ப்புன்னை நன்னிழல் வாய்முன் நயந்தசெவ்வி
மறவா நமைமறந் தார்அவர் போல்இல்லை வன்னெஞ்சரே.
அம்பி. 243
[நறுங்குழையை அணிந்த, ஒளிமிக்க பற்களை உடையாய்! நம் தலைவர்,
இறாமீன்களை ஒருசேர உண்ணும் நாரைகள் தங்கும் பசிய
கடற்கரைச் சோலையில், வண்டுகள் சூழும் தேன் மிக்க மலர்களை உடைய
புன்னைமர நிழலில், நம்மை விரும்பி வந்த செவ்வியை நாரைகள்
மறக்கமாட்டா. நம்மை மறந்த தலைவரைப்போன்ற கடிய நெஞ்சுடையார்
ஒருவரும் இரார்.]
|
|
|
|