அகத்திணையியல்-நூற்பா எண்-149                         475


 

     தலைமகள் இயற்பட மொழிதல்:

  யாமைதன் பார்ப்பை இகந்துஉயிர் காக்கும் இருந்துறைவன்
  தீமைநம் பால்செயல் சிந்திக்கு மோசெவ்வி போய்ஒழிந்த
  மாமையும்பார்த்தவன்வாய்மையும்பார்த்துவரும்தன்மன்றல்
  பூமணம் பார்த்துஅளி புல்லும்அல் லார்குழல் பூங்கொடியே.

      அம்பி.244 

 எனவும்,

     [வண்டு மொய்க்கும் கருங்குழல் தோழியே! யாமை தன் பார்ப்புக்களைப்
 பிரிந்திருந்தாலும், தான் அவற்றை ஒருகால் நினைப்பதனாலேயே அவற்றின்
 உயிரைப் பாதுகாக்கும் கடல் துறைகளையுடைய தலைவன் நம்மிடம்
 தீமைகள் செய்தலைக் கருதுவானோ? வனப்புக்கெட்ட நம்மாமைநிறத்தையும்
 தன் வாய்மையையும் தான்மணக்க வேண்டிய நாளையும் அவன் தவறாது
 நினைத்துக்கொண்டிருப்பான்.]

கனவு நலிபு உரைத்தல்:

    

     கேட்டிசின் வாழி தோழி அல்கல்
     பொய்வல் லாளன் மெய்உற மரீஇ
     வாய்த்தகை பொய்க்கனா மருட்ட ஏற்றுஎழுந்து
     அமளி தைவந் தனனே குவளை
     வண்டுபடு மலரில் சாஅய்த்
     தமியேன் மன்ற அளியேன் யானே.

            குறுந். 30 

 எனவும்,

     [தோழி! இதனைக்கேள்! பொய்த்தலில் வல்ல நம் தலைவன் நேற்று
 இரவு என்னை உடல்உறத் தழுவிய உண்மையைப் போன்ற பொய்க்கனா
 என்னை மயக்கியதனால், உறக்கம் தெளிந்து தலைவனைப் புல்லுதற்கு என்
 படுக்கையைத் தடவினேன். வண்டுகள் மொய்த்தலால் இதழ் குலைந்த
 குவளைப்பூப்போல, மன அமைதி நுணுகித் தன்னந்தனியளாய் இரங்கத்
 தக்க நிலையினேன் ஆனேன்.]