[தோழி! தலைவனிடம், புனத்திலே யானையால் வருந்திய ஆண்புலி செந்நாய் தன்னிடம் அகப்படும் செவ்வியை எதிர்பார்த்துப் பதுங்கி இருக்கும். அரிய இருட்டை உடைய நடுஇரவிலே வருதல் வேண்டா. "விளைந்த தினைப்புனத்தில் கதிர் கொய்யவரும் கிளைகளைக் கடியச் சேய்மையில் உள்ள தினைப்புனக்காவலைக் கொள்க" என்று அன்னை கூறியுள்ளாள். ஆதலின் பகற்குறி வாய்க்கும் என்று கூறுவாயாக]
வெறி விலக்குவித்தல்:
மின்னாது இடித்தென்ன அன்னைகொண் டாள்வெறி விந்தைமங்கை
மன்ஆண்மை மன்னிய வாணன்தென் மாறையில் வஞ்சி வண்டுயாழ்
என்னா அசுணம் இறைகொள்ளும் நாடன் எனக்குஅருளான்
முன்னாள் அருளிய நோய்தணிப் பான்இன்று மொய்குழலே. தஞ்சை. 225
எனவும்,
[மொய்குழலே! வெற்றித்திருவின் கணவனாய் ஆண்மைக்கு இருப்பிடமான வாணனுடைய மாறையில் வண்டொலியை யாழ்ஒலி என்று கருதிச் செவிமடுத்தற்கு அசுணங்கள் வந்துதங்கும் நாட்டை உடைய தலைவன் தன் அருளால் எனக்கு அருளியுள்ள நோயைத் தணிப்ப, மின்னல் இன்றியே இடி தோன்றினாற்போல, எதிர்பார்த்தல் இன்றியே திடீரென்று வெறியாட்டிற்கு ஏற்பாடு செய்துவிட்டாள் அன்னை.]
பிறர் விலக்குவித்தல்:
வருவன செல்வன தூதுகள் ஏதில வான்புலியூர்
ஒருவனது அன்பரின் இன்பக் கலவிகள் உள்உருகத்
தருவனசெய்து எனது ஆவிகொண்டு ஏகிஎன்நெஞ்சில்தம்மை
இருவின காதலர் ஏதுசெய் வான்இன்று இருக்கின்றதே. திரு. 281
|
|
|
|