கெழீஇய "கெழி" என விகாரமாய் நின்றது; உம்ம உம்மன என
உளப்பாட்டுத் தன்மையாய் நின்றது.
[அம்பலத்தில் கூடித்தேவர் ஏத்தும் சிவபெருமானுடைய குற்றாலம்
முழுதும் அறியத் தலைவியின் தோள்கள் அவளோடு தொடர்புடைய
உனக்கே உரியவாகும், மணந்து அவளை உன்னவள் ஆக்குதலே நேரியவழி.
என்னைவிட என் தாயும் மகிழ்வாள். எந்தையும் உன் வேண்டுகோளுக்கு
இசைவான். உறவினர் முன்னமேயே உன் வசப்பட்டுள்ளனர். இவ்வாறாக
யான் பல கூறுவது எதற்காக? உடனே தலைவியை வரைந்து கொள்ளுதற்கு
ஆவன செய்வாயாக.]
வரையும் நாள் உணர்த்தல்:
மைஆர் கதலி வனத்து வருக்கைப் பழம்விழுதேன்
எய்யாது அயின்றுஇள மந்திகள் சோரும் இருஞ்சிலம்பா
மெய்யா அரியதென் அம்பலத் தான்மதி ஊர்கொள்வெற்பின்
மொய்ஆர்வளர் இளவேங்கை பொன்மாலையின் முன்னினவே.
திரு.262
எனவும்,
[இப்பாடல் அகநானூற்று இரண்டாம் பாடலின் கருத்தைக் கொண்டது.
வாழைத் தோட்டத்தில் வருக்கைப்பலாப் பழத்திலிருந்து பெருக்கெடுத்து
ஓடும் தேனை அறியாது உண்டு இளைய மந்திகள் மயங்கும் மலைநாடனே!
அம்பலத்தானுக்கு உரிய மதியத்தை ஊர்கோள் சுற்றும் மலையிலே,
இளவேங்கைகள் பொன்மாலை போலப் பூத்துவிட்டன. வேங்கை
பூக்கும்காலம் தினைக்கதிர் அரியும்காலம். தினைக்கதிர் அரியப்படவே,
தினைக்காவல் இன்று ஆதலின், பகற்குறி வாயாது; நிலா பகல்போல
ஒளிவிடுவதனால், இரவுக்குறியும் வாயாது; ஆதலின் தலைவியை
மணந்துகொண்டே இன்பம் துய்க்கவேண்டும். அதற்கு வேண்டிய நிறைமதி
நாளும் அண்மையில் வந்துவிடும் என்பது.]