கொடிக்குங் குமமுலை வல்லிக்கு நீஇது கூறுசென்று
வடிக்கின்ற வேல்விழி யாய்வருகேன்இற்றை வைகல்சென்றே.
[வேல்விழியாய்! கரும்பை ஒடிக்கும்போது விண்மீன்கள்போல முத்துக்கள் வெளிப்படும் எம்மூருக்குச் சென்று யான் இருந்து முடிக்கவேண்டிய காரியம் ஒன்று உண்டு இன்று என் ஊர் சென்று நாளை மீள்கிறேன். இதற்கு நீ இசைதல் வேண்டும். மேலும் நீ சென்று இதனை முத்தணியும் மார்பினளாகிய தலைவிக்குக் கூறுவாய்.]
மென்சொல் பாங்கி விலக்கல்:
அறையும் கடல்அன்ன அன்பின்எம் ஆவியின் நும்அரிய
குறைஇங்கு உமக்குமுடிப்பது உண்டேல்கொண்டகாதலுடன்
உறையும் பதிக்கண் ஒருப்பட்ட போதுநின் உள்ளம்செல்ல
இறையும் தவிர்க்ககில் லேன்எம் பிரான்நின்று எழுந்தருளே.
[தலைவ! கடலை ஒத்த அன்பினை உடைய எம் உயிராகிய தலைவியைவிட உமக்கு உம் காரியத்தை முடித்தல் அவசியமானால், காரியத்தில் விருப்பத்துடன் நீ உன் ஊருக்குச்செல்ல ஒருப்பட்டுச்செல்ல உள்ளம் கொண்டனையாயின், உன்னைச் சிறிதும் தடுக்கும் ஆற்றல் எனக்கு இல்லை. நீ புறப்படுவாயாக.]
உள்ளம் தடுப்ப வினையேன் எனைஇங்கு உறைபதிக்குத்
தள்ளும் பரிசு தலைக்கொண் டதுதணந் தாலும்வந்து
வெள்ளம் சுரும்பு விரும்புபைங் கோதை விளங்குஇழையாய்
நள்ளென் பகல்வரு வேன்ஒடுங் காஉள் நடுங்கலையே
|
|
|
|