நம்மொடு கூடியிருக்கும் காலத்திலேயே ஒருநாள் நம்மைவிட்டுப் பிரிய நினைக்கும் தலைவர், நம்மைப் பிரிந்த பின் மறுநாளில் நம்மை மறத்தற்கும் ஆற்றல் உடையவர். அவர் மறந்தபின்னர், நினைவைப் பறிகொடுத்த நாமும் நம் உயிரும், மலர்க்கணை தொடுக்கும் மன்மதன் அம்பு எய்யும் போது அரிய நாணத்தோடு எங்ஙனம் ஆற்றி இருத்தல் கூடும்?]
சென்றோன் நீடலின் காமம்மிக்க கழிபடர்கிளவி:
ஆரம் பரந்து திரைபொரு நீர்முகில் மீன்பரப்பிச்
சீர்அம் பரத்தில் திகழ்ந்துஒளி தோன்றும் துறைவர்சென்றார்
போரும் பரிசு புகன்றன ரோபுலி யூர்ப்புனிதன்
சீர்அம்பர் சுற்றிஎற் றிச்சிறந்து ஆர்க்கும் செறிகடலே.
திரு. 182
எனவரும். போதரும் பரிசு "போரும் பரிசு" என விகாரமாய் நின்றது.
[புலியூரில் உள்ள சிவபெருமானது அழகிய அம்பர் என்ற ஊரைச்சுற்றிச் சிறந்து ஆரவாரிக்கும் கரையைக் கடவாத கடலே! முத்துப் பரந்து திரைகள் தம்முள் மோதும் கடல்நீர் முகிலையும் மீனையும் தன்கண் பரப்பி ஆகாயம்போல விளங்கி ஒளி தோன்றும் துறைவர் எம்மை விட்டுச் சென்ற போது, மீண்டு வரும் நேரத்தை உமக்குக் கூறினரோ? சொல்வாயாக.]
தலைவியைப் பாங்கி ஆற்றுவித்தல்:
அருகும் கலவி அளித்துஅகன் றார்அருள் இன்மைஎண்ணி
உருகும் தனிநெஞ்சம் உள்மகிழ் கூரவந்து ஒண்மதியைப்
பொருபைங் கதலியும் பூகமும் கன்னலும் பூவும்கொண்டு
வருகின்ற தால்அவர் ஊர்மலி நீர்நதி வாள்நுதலே.
|
|
|
|