[வாள்நுதலே! கலவி அளித்து நம்மை அகன்ற தலைவனுடைய அருளற்ற செயலை நினைத்து உருகும் உன்நெஞ்சம் மகிழுமாறு, வான் அளாவிய வாழை, பாக்கு, கரும்பு இவற்றையும் பூக்களையும் அடித்துக்கொண்டு அவர் ஊரிலிருந்து பெருகிவரும் ஆறு நம்மூர்க்கண் வெள்ளப்பெருக்கோடு காட்சி வழங்கி வருகின்றது.]
உரையிற் கோடலான், பாங்கி ஆற்றுவித்துழித் தலைவி நெஞ்சு நினைந்து இரங்கலும், நெஞ்சொடு கிளத்தலும், கடலொடு புலம்பலும், ஆற்றொடு புலம்பலும், புள்ளொடு புலம்பலும், கையறுகிளவியும், கூடல் இழைத்தலும், சூளுறவு பொய் என்றலும், மடமை கூறலும், தலைவி தன்னுள்ளே சொல்லுதலும் என்ற பத்தும் வரவும் பெறும். அவற்றுக்கு உதாரணம் பின்வருமாறு.
தலைவி நெஞ்சுநினைந்து இரங்கல்:
தேறாத அன்பினர் சென்றுழிச் சென்றஎன் சிந்தைகண்டு
மாறாது கூட வரநின்றதோஇங்கு வந்துஎன்வணம்
வேறா னதுகண்டு மீண்டது வோஅன்றி மாண்டதுவோ
ஆறாது மையல்உற் றேன்அறி யேன்வந்து அடுத்ததுவே.
அம்பி. 287
எனவும்,
[தெளிந்த அன்பில்லாத தலைவர் சென்ற இடம் நோக்கிச் சென்ற மனம் அவரைப் பிரிந்துவர விரும்பாது அவரை அழைத்துக்கொண்டு அவருடன் வருதற்காக நின்றதுவோ? இங்கு வந்து என் நிறம் வேறானதுகண்டு அடையாளம் காண இயலாது மீண்டதுவோ? நீங்காத மயக்கமுற்ற யான் நிகழ்ந்த செய்தி ஒன்றும் அறியேன்.]
64 |
|
|
|