நெஞ்சொடு கிளத்தல்:
யாயும் கடலும் அலைப்பஇவ் வூரில்இங்கு என்னைவைத்துப்
போய்அங்கு நம்மை மறந்தவர் பால்சென்று பூண்முலைமேல்
பாயும்கண் ணீரும் பசலையு மாய்நின்ற பாவிநெஞ்சே
நீஎன்சொன் னாய்பின் அவர்என்சொன் னார்உன் நினைவுஅறிந்தே.
அம்பி 289
எனவும்,
[தாயும் கடலும் என்னைத் துன்புறுத்துமாறு என்னை இவ்வூரில் தனித்து இருக்குமாறு வைத்துவிட்டுத் தம் ஊருக்குப் போய் அங்கு நம்மை மறந்தவரிடம் சென்று, மார்பில் கண்ணீர் வடிய, உடல் முழுதும் பசலை பரக்க நின்ற என் நெஞ்சமே! நீ அவரிடம் யாது கூறினாய்? அதற்கு உன் நினைவை உட்கொண்டு அவர் கூறிய மறுமாற்றம் யாது?]
கடலொடு புலம்பல்:
அவிகொண்ட வெங்கனல் அம்புகொண்டு எய்தனர் அன்றியும்புன்
கவிகொண்டு நின்னைக் கடந்தனர் என்றுகொல் கன்றினர்தம்
புவிகொண்டு வண்புகழ் போர்ப்பவர் தேர்வழி தூர்ப்பதுநீ
குவிகொண்டல் உண்டுஉமிழ் தெண்திரை மோதும் குரைகடலே.
அம்பி. 290
எனவும்,
[மேகம் உட்கொண்டு உமிழ்ந்த நீர் பாய்தலால் தெள்ளிய அலைகள் வீசி மோதும் ஒலிக்கின்ற கடலே! என் தலைவர் பகைவர் நாட்டைக் கைக்கொண்டு பெரும் புகழால் உலகையே போர்த்திருப்பவர் ஆதலின், அவர் திருமாலின் அவதாரம் ஆவர். அவர் இராமனாய் அனம் அம்பு விட்டு உன்னைத் துன்புறுத்தினர் என்றும், குரக்குப் படையைக்கொண்டு நின்மீது அணைகட்டி நின்னைக் கடந்தனர் என்றும் போலும் அவரது தேர் சென்ற வழியை நின் அலைகளால் அழிக்கின்றாய்.]
|
|
|
|