அகத்திணையியல்-நூற்பா எண்-153                         507


 

     ஆற்றொடு புலம்பல்:

  மறைவந்துஎன்மேனி மணந்து உயிர்வாடத்தணந் தசைநின்று
  இறைவன் கொடுமை இயம்புதல் நாணி இரங்கிமெய் யை
  நறைஉந் தியமலர்த் தூசான் மறைத்துஇந் நகர்ப்புறம்போம்
  நிறைஉந்தி நீஎன்செய் வாய்இது வாகில்என் நீள்வினையே.

அம்பி. 291 

 எனவும்,

     [களவில் வந்து என்னை மணந்து பின் பிரிந்து என் உயிரை வாட்டிய
 என்தலைவனுடைய  கொடுமையை எனக்குக் கூறுதற்குக் கூசி மனம் இரங்கி
 உடம்பை மலர் ஆடையால் மறைத்து இவ்வூருக்கு வெளிப்புறத்திலேயே
 போய்க்கொண்டிருக்கும் நீர்ச்சுழி உடைய நதியே! என் தீவினையால் என்
 தலைவன் பிரிந்தானாக, நீ யாது செய்யவல்லை?]

     புள்ளொடு புலம்பல்:

  எம்கா தலர்செல்ல என்னைஇவ் வாறுகண்டு ஏசுமவர்
  தம்கா தலரைத் தணந்துஅறி யார்கொல் மணந்துஉறையும்
  செங்கானல் ஓதிமங் காள்கருங் கானல் சிறைஅன்றில்காள்
  உம்கா தலர்செல்லின் நீர்உடன் போம்இக் குரம்பைவிட்டே.

அம்பி. 292 

 எனவும்,

     [என் தலைவன் என்னைப்பிரிந்து சென்றானாக, என் நிலைமையைக்
 கண்டு என்னை எள்ளி நகையாடுபவர்கள் தம் கணவன்மார்களைப் பிரிந்து
 இருத்தலை அறியாதவர்கள்போலும்; கூடிவாழும் அன்னங்களே! கடற்கரைச்
 சோலையில் உள்ள அன்றில்களே! உம் தலைவர் பிரிந்து  செல்வாராயின்,
 நீங்கள் இக்கூடுகளை விட்டு, அவர்களுடனேயே பிரியாது சென்று
 விடுங்கள்.]