510                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

      [களவுப்புணர்ச்சியில் என்னைக்கூடிப் பின் பிரிந்த தலைவருடைய
  மார்பைத் தோயாததனால்  சுடும் உடல் என்னைப் பிரிந்த தலைவருடைய
  நாட்டிலிருந்து அவர் மலைப்பக்கத்துத்  தழைகளைக் கொண்டு வரும்
  இனிய நீரில் குளித்தால் இன்றே வெப்பம் நீங்கக் குளிர்ச்சியைப்
  பெற்றுவிடும்.]

பாங்கி தலைமகட்குத் தலைமகன் வந்தமை உணர்த்தல்:

   சந்துஆர் வனமுலை தங்கும் பசப்பும் தனிமையும்நின்
   சிந்தா குலமும் சிதையும் படிசிறை வண்டினம்சேர்
   கொந்துஆர் அலங்கல் குழல்அணங் கேதம் குறைமுடித்து
   வந்தார் விரைய மணிநெடுந் தேர்இன்னம் மன்னவரே.

அம்பி. 300 

 எனவும்,

      [வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய தலைவியே! நின்
  முலைப்பசலையும் தனிமையும்  நின் மனத்துயரும் நீங்கும்படி, நம்
  தலைவர் தாம் போன காரியத்தை முடித்துத் தம் மணி நெடுந்தேரில் ஏறி
  விரைவாக வந்துவிட்டார்.]

வந்தோன் தன்னொடு பாங்கி நொந்து வினாதல்:

  வளரும் கறிஅறி யாமந்தி தின்றுமம் மர்க்குஇடமாய்த்
  தளரும் தடவரைத் தண்சிலம் பாதனது அங்கம்எங்கும்
  விளரும் விழும்எழும் விம்மும் மெலியும்வெண் மாமதிநின்று
  ஒளிரும் சடைமுடி யோன்புலி யூர்அன்ன ஒண்ணுதலே.

திரு. 193 

 எனவும்,

      [மிளகை அறியாது உண்ட மந்தி மயக்கமுற்றுத் தளரும் மலைநாடனே!
  மதி சூடிய  சிவபெருமானுடைய புலியூரை ஒத்த தலைவி தன்
  உடல்முழுதும் வெளுத்துப்போக விழுந்து எழுந்து விம்மி மெலிந்துள்ளாள்.]