[ஒளி பொருந்திய வளையலை உடையீர்! பகைவரை வென்று அவர்கள்
யானைகளைக் கைப்பற்றிய வாணன் தென்மாறையை அடையாதவர்களைப்
போலப் பொருந்தாப் பழிமொழிகளை ஏற்றுக் கொண்டு நீங்கள் இருவீரும்
தனியாக, ஐந்தலை நாகத்திடம் அகப்பட்டவர் போலப்
பெருந்துன்பப்பட்டு, என் போல எவ்வாறு வருந்தி இருந்தீரோ?]
பாங்கி தலைவியை ஆற்றுவித்திருந்த அருமை சொல்லல்:
இவள்ஆ ருயிர்புரந்து யான்இருந் தேன்செக்கர் இந்துஎன்னப்
பவளா டவியில் பயில்நித் திலம்பங் கயம்குவியத்
தவளா தபம்சொரி தண்துறை வாதஞ்சை வாணன்தெவ்வின்
துவளாமல் ஆற்றுவி என்றுஎன்று நீசொன்ன சொல்நினைந்தே.
தஞ்சை. 259
எனவும் வரும்.
[செவ்வானிடைத் தோன்றிய சந்திரனைப் போலப் பவளக் காட்டில்
இடையே பொருந்திய முத்துக்கள் தாமரை குவியுமாறு நிலாவைப்போன்ற
வெள்ளிய கதிர்களைச் சொரியும் துறைவனே! 'தஞ்சைவாணனுடைய
பகைவரைப் போல இவள் வருந்தாதபடி நீ ஆற்றுவித்துக்கொண்டு
இருப்பாயாக' என்று நீ கூறிய சொற்களையே ஆதாரமாகக் கொண்டு,
இவளது அரிய உயிர் சோராதபடி நான் ஆற்றுவித்துகொண்டிருந்தேன்.]