என்று வாடி வருந்தித் தலைவி பேசும் நிலையில் மிக விரைந்து சென்று
அவளை அடைவதற்கு, வரைபொருட்குப் பிரிந்து தலைவியை வாழ்வித்த
என் மனத்தை உன் கையாகவும் உன் தேர்க் குதிரைகளாகவும் அயன்
படைந்தான் அல்லனே! ஆதலின் இயன்றவரை தேரை விரைவில் செலுத்து.]
தலைமகன் மேகத்தொடு சொல்லல்:
கிளைத்துக் கிடந்துஎனைக் கேட்குந் தொறும்கலுழ் கெண்டையும்முன்
வளைத்துக் கிடந்த வரிமணல் கூடலும் வண்ணம்எல்லாம்
விளைத்துக் கிடந்த பசலையு மாய்உள்ளம் விம்மிவிம்மி
இளைத்துக்கிடந்தவர்க்கு என்சொலமேகங்கள் முன்செல்வதே.
அம்பி. 322
எனவும்,
[உள்ளத்தில் பல எண்ணங்கள் உண்டாகக் கிடந்து என் பேச்சை
எடுக்குந்தொறும் கண்ணீர் வடித்து, மணலில் கூடற்சுழிவரைந்து, நிறம்
பசலைபாய மனம் விம்மிவிம்மி இளைத்துக் கிடக்கும் தலைவிக்கு என்
தூதாக என்ன சொல்வதற்காக மேகங்கள் எனக்கு முன்னே புறப்பட்டுச்
செல்கின்றன?]
பாங்கி வலம்புரிகேட்டு அவன்வரவு அறிவுறுத்தல்:
பொருகின்ற செங்கயல்போல் விழியாய்பண்டு போயநின்கைக்
குருகுஇன்று வந்துஇறை கொள்வது காண்கநம் கொண்கர்பொற்றேர்
தருகின்ற சங்கம் தருஅன்ன வாணன் தமிழ்த்தஞ்சைவாய்
வருகின்றது என்றுமுன் னேஓகை கூறும் வலம்புரியே.
தஞ்சை 277
[செங்கயல் விழியாய்! முன்புபோல இன்றும் நின் கைவளைகள் கழலாது
அழகாகத் தங்கும் வாய்ப்பு ஏற்பட்டுவிட்டது. நம் தலைவனுடைய பொற்றேர்
சங்கநிதிபோன்ற கொடைத்தொழிலை உடைய வாணனுடைய தமிழ்த்
தஞ்சையை நோக்கி வந்துகொண்டு இருக்கும் செய்தியை நமக்கு மகிழ்ச்சி
உண்டாகுமாறு முன்னமேயே வலம்புரிச்சங்கங்கள் முழங்கித்
தெரிவிக்கின்றன.]