எனவும்,
[பொன் கொழிக்கும் வண்டலைஉடைய வைகைக் கரைக்கண்
பூத்துச்சிறக்கும் மல்லிகைமொட்டில் வண்டு இருந்தாற் போலக் காணப்படும்
கரிய முகத்தை உடையவெண்சங்கு, திருமால் கையில் இருக்கும்
பாஞ்சன்னியத்தைப் போலப் பெருமையுற்று, வாணன் புகழ்போலத்
தமிழ்மன்னர் போற்றும் புகழோடு விளங்குவதாகுக.]
தலைமகன் வந்துழிப் பாங்கி நினைந்தமை வினாதல்:
கடம்தந்த வெங்கைக் களிற்றுவெங் கானம் கடந்துசென்று
தடம்தந்த தாமரைத் தண்புனல் நாட்டுத் தடங்கடல்நீர்
விடம்தந்து அமுதம் தரும்மட நோக்குஇவண் மேவமனத்து
இடம்தந்து அறிவதுஉண் டோஒரு நாள்எம் இறையவனே.
அம்பி.324
[தலைவ! யானை செறிந்த காடுகளைக் கடந்து சென்று நீ தங்கிய
தாமரைத் தடாகங்கள் நிறைந்த புனல்நாட்டிலே, விடமும் அமுதமும்
போலும் பார்வைகளை உடைய தலைவி இங்கு உன்னைப் பிரிந்து
தனித்திருக்கும் நிலையை ஒரு நாளாவது நீ நினைத்தது உண்டோ?]
தலைமகன் நினைத்தமை செப்பல்:
கோவையை வென்றசெவ் வாய்க்கொடி யேபொருள்கூட்டஎன்னும்
தேவையைமேற்கொண்டு தீவினையேன் சென்றசென்றஇடம்
யாவையும் உங்கள் இளமரக் காவும் இழைத்தகுன்றும்
பாவையும் நீயும் பரிமளச் சோலையும் பண்ணையுமே.
எனவும், அம்பி. 325