கைக்குடை - சிறியகுடை; கைஏடு - சிறிய ஏடு; கை வாய்க்கால் -
சிறிய வாய்க்கால்; கைக்கிளை என்பதற்குப் பெருமை இல்லாத தலைமக்கள்
கிளைமை என்று எடுத்துக காட்டுக்களுடன் பொருள்கொள்பவர்
உரையாசிரியர். கைக்கிளை என்பது ஒருமருங்கு பற்றிய கேண்மை என்று
பொருள்கொள்பவர் நச்சினார்க்கினியர்.
எண்வகை மணங்களாவன - அறநிலை, ஒப்பு, பொருள்கோள், தெய்வம்,
யாழோர்கூட்டம், அரும்பொருள்வினை, இராக்கதம், பேய்நிலை என்பன.
இவற்றுள் அறநிலை முதலிய நான்கும் பெருந்திணைக்கும், யாழோர் கூட்டம்
ஒன்றும் ஐந்திணைக்கும், ஏனைய மூன்றும் கைக்கிளைக்கும் உரியன;