93


 

இலக்கணவிளக்கம்-மூன்றாவது பொருளதிகாரம்
முதலாவது அகத்திணைஇயல்
தற்சிறப்புப்பாயிரம்

 373.உமைஉரு உருமடுத்து உலகுஇளைப்பு ஒழிக்கும்
     இமையவன் அடிபணிந்து இயப்புவன் பொருளே.

     என்பது சூத்திரம். மேல்பாயிரத்துள் "எழுத்துமுதல் மூன்றையும்" என
 நிறுத்த முறையானே, எழுத்தும் சொல்லும் உணர்த்திப் பொருள்
 உணர்த்துகின்றார் ஆதலின், இவ்வதிகாரம் பொருளதிகாரம் என்னும்
 பெயர்த்து. பொருளை உணர்த்திய அதிகாரம் என விரிக்க. பொருள்
 என்றது அதன் இலக்கணம். அதிகாரம் என்றது முறைமை. பொருளாவது
 மேல் உணர்த்திப்போந்த சொற்றொடர் கருவியாக உணரப்படுவதாகலின்,
 மேல்அதிகாரத்தோடு இயைபு உடைத்தாயிற்று. இவ்வதிகாரத்துள் ஐவகை
 ஓத்தினால் பொருள் இலக்கணம் உணர்த்துகின்றார். அவற்றுள்,
 இம்முதல்ஓத்து அகத்திணை இயல்பு உணர்த்திற்று ஆகலான்
 அகத்திணையியல் என்னும் பெயர்த்து. அகம் என்றது உள்ளம்,
 திணைஎன்றது ஒழுக்கம், இயல்என்றது இலக்கணம்; எனவே,
 அகத்திணையியல் என்றது உள்ளத்தின்கண்ணே நிகழும். இன்பமாகிய
 ஒழுக்கத்தினது இலக்கணம் என்றவாறு ஆயிற்று என்பது. இதனுள்,
 இத்தலைச்சூத்திரம், கூறத்தொடங்கிய பொருள் இனிது முடியும்பொருட்டு
 வணக்கமும் அதனால் முடிபுஎய்தும் பொருளும் உணர்த்துவதாகிய
 சிறப்புப்பாயிரம் கூறுகின்றது.

     இ-ள் உமாதேவியினது திருவுருவைத் தனது திருவுருவின்கண்ணே
 அடக்கி உலகத்து இளைப்பினை ஆற்றும் இறைவனது தாளை வணங்கி
 யான்சொல்லுவன் பொருள் இலக்கணத்தை என்றவாறு.