94                            இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     ஈண்டு உலகம் என்றது உலகினையும் உலகிலுள்ள சீவான்மாக்களையும்,
 ஆகுபெயரால் பொருள் என்றது அதன் இலக்கணத்தையும் உணர்த்திநின்றன.
 ஏனையவற்றிற்கும் ஏற்குமாறு "மலைமகள் ஒருபால்"  [இ-வி-1] என்னும்
 சூத்திரத்திற்கு உரைத்தாங்குப் பொருள் விரித்து உரைத்துக்கொள்க.

விளக்கம்

     பொருளதிகாரம், அகத்திணையியல் என்பனவற்றின் விளக்கம்
 நச்சினார்க்கினியத்தை ஒட்டி வரையப்பட்டன.

     நச்சினார்க்கினியர் "பொருளாவன அறம் பொருள் இன்பமும்,
 அவற்றது நிலையின்மையும் அவற்றின் நீங்கிய வீடுபேறுமாம். பொருள்
 எனப் பொதுப்படக் கூறவே, அவற்றின் பகுதி ஆகிய முதல் கரு உரியும்
 காட்சிப்பொருளும் கருத்துப்பொருளும் அவற்றின் பகுதியாகிய ஐம்பெரும்
 பூதமும் அவற்றின் பகுதியாகிய இயங்குதிணையும் நிலைத்திணையும் பிறவும்
 பொருளாம்" [தொல்.பொ.-1] என்று விளக்கம் தந்துள்ளார்.

     உமாதேவியின் திருவுருவைச் சிவபெருமான் தன்உருவில்
 அடக்குதல்,

     "பெண்உரு ஒருதிறன் ஆகின்று அவ்வுருத்
     தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்"

புறநா. கடவுள்வாழ்த்து

     என்பதனானும் பெறப்படும்.

     உலகம் என்பது நிலத்தை உணர்த்தும்போதும், சீவான் மாக்களை
 உணர்த்தும்போதும் வேறுவேறு சொல் ஆயினும் எழுத்து ஒற்றுமைபற்றிப்
 பலபொருள்தரும் ஒருசொல்லாகக் கொள்ளப்படுகிறது. இதனைக் "காலம்
 உலகம்" [தொல். சொல்.57] என்ற நூற்பாவில் சேனாவரையர் சுட்டியுள்ளார்.
 எனவே, உலகம் என்பது சீவான்மாக்களை ஆகுபெயராய் உணர்த்துவது
 அன்று என்பது.